

சென்னை: மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்தாலும், வடதமிழகத்தில் வாக்குவங்கியை பாமக தக்க வைத்துள்ளது.
சென்னையில் 1989-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) தொடங்கப்பட்டது. அந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலை 36 தொகுதிகளில் தனித்து போட்டியிட்ட பாமகவால் எந்த தொகுதியிலும் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து, ராஜீவ்காந்தி படுகொலைக்கு பின்னர் 1991-ம் ஆண்டு நடந்தமக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தனித்து போட்டியிட்டது. பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் பாமக சார்பில் போட்டியிட்ட பண்ருட்டி ராமச்சந்திரன் வெற்றி பெற்றார்.
1996 மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக வாழப்பாடி ராமமூர்த்தி திவாரி காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து, 20 மக்களவை தொகுதிகள் மற்றும் 104 சட்டப்பேரவைத் தொகுதிகளில் போட்டியிட்ட பாமக, 4 பேரவை இடங்களில் வெற்றி பெற்றது. 1998-ல் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 5 தொகுதிகளில் 4 இடங்களில் வெற்றி கண்டது.
இதனைத் தொடர்ந்து 1999மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 8 இடங்களில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 2001 பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகளில் போட்டியிட்டு 20-ல் வென்றது. 2004 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 6 இடங்களில் வெற்றி அடைந்தது. 2006 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. 2009 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 9 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி அடைந்தது.
இதையடுத்து 2011 பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டு 3 இடங்களில் வெற்றி பெற்றது. 2014 மக்களவைத் தேர்தலில் தருமபுரியில் போட்டியிட்ட அன்புமணி மட்டும் வெற்றி பெற்றார். 2016 பேரவைத் தேர்தலில் தனித்து போட்டியிட்டு 232 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 7 தொகுதிகள் போட்டியிட்ட பாமக அனைத்திலும் தோல்வி அடைந்தது. தேர்தலுக்கு முந்தைய ஒப்பந்தப்படி, அன்புமணி மாநிலங்களவை உறுப்பினரானார்.
2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், தற்போது நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்டதில் அனைத்திலும் தோல்வி அடைந்தது. தருமபுரி தொகுதியில் மட்டும் கடைசி வரை கடும் போட்டி நிலவியது.
இந்த மக்களவைத் தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிட்ட பாமக மொத்தமாக 18,79,689 வாக்குகளை (4.30 சதவீதம்) பெற்றுள்ளது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் 23 தொகுதிகளில் போட்டியிட்ட பாமகமொத்தமாக 17,58,774 வாக்குகளை (3.8 சதவீதம்) பெற்றது. வடதமிழகத்தில் தொடக்கத்தில் இருந்தே 4 முதல் 5.5 சதவீத வாக்குகளை பாமக தக்க வைத்து வருகிறது. அதன்படி, இந்த தேர்தலிலும் பாமக தனது வாக்கு சதவீதத்தை தக்க வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.