

சென்னை: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நீடிப்பது அந்த கட்சிக்கு நல்லது இல்லை திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி, தூத்துக்குடி மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நேற்று காலை தூத்துக்குடியில் இருந்து விமானம் மூலம் சென்னைக்கு வந்தார்.
சென்னை விமான நிலையத்தில் அவருக்கு கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது, அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தூத்துக்குடி மக்களுக்கு, என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் பாஜகவுக்கு இடமே இல்லை.தமிழகத்தில் தாமரை மலராது என்று மிகத் தெளிவாக மக்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அண்ணாமலை என்னை பார்த்து அடிக்கடி ஒரு கேள்வி கேட்பார். கனிமொழிக்கு என்ன தகுதி இருக்கிறது என்று. இரண்டாவது முறையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்கள் பிரதிநிதியாக, நான் அவருக்கு பதில் சொல்கிறேன். நீங்கள் அந்த தகுதியைகூட பெறவில்லை. எனவே இந்த தகுதி இல்லாத ஒருவர், தமிழகத்தின் பாஜகவின் தலைவராக நீடிப்பது அந்த கட்சிக்கு நிச்சயமாக நல்லது கிடையாது.
அதிமுக கடந்த காலத்தில் செய்த தவறுக்காக, மக்கள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். வாக்கு எண்ணிக்கையில் முதல் சில சுற்றுகள் பின்தங்கி தோல்வி முகத்தில் இருந்தார் மோடி. இந்த தோல்விக்கு தார்மீக பொறுப்பேற்று, உடனடியாக அவர் பதவி விலக வேண்டும்.
இவ்வாறு கனிமொழி கூறினார்.