

சென்னை: கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின்போது திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். தன்னை கைது செய்தபோது மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறி ஜெயக்குமார் மற்றும் முன்னாள் எம்.பி. ஜெயவர்தன் சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகாரை விசாரித்த மாநில மனித உரிமைகள் ஆணையம், இருவரது புகாரையும் முடித்து வைத்து கடந்தாண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து ஜெயக்குமார் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில மனித உரிமைகள் ஆணைய கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூன் 19-க்கு தள்ளிவைத்தனர்.