Published : 06 Jun 2024 05:35 AM
Last Updated : 06 Jun 2024 05:35 AM

காயிதே மில்லத் 129-வது பிறந்தநாள் விழா: நினைவிடத்தில் அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை - முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

காயிதே மில்லத் 129-வது பிறந்த நாளை ஒட்டி, சென்னை திருவல்லிக்கேணி, பெரிய பள்ளி வாசல் வளாகத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மு.பெ.சுவாமிநாதன், பி.கே .சேகர்பாபு மற்றும் கட்சி நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர். | படம்: ம.பிரபு |

சென்னை: காயிதே மில்லத் பிறந்தநாளை ஒட்டி, அவரது நினைவிடத்தில் அமைச்சர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். காயிதே மில்லத் 129-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், ‘தமிழ் மொழிக்காகவும், இஸ்லாமிய சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காகவும், மத நல்லிணக்கம் நம் மண்ணில் தழைத்தோங்கவும் உழைத்த கண்ணியத் தென்றல் காயிதே மில்லத் பிறந்த நாளான இன்று, அவரது தொண்டுகளை நினைவுகூர்வோம்’ என்று தெரிவித்துள்ளார்.

அரசு சார்பில் மரியாதை: சென்னை திருவல்லிக்கேணி வாலாஜா பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் உள்ள காயிதே மில்லத்நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, சி.வி.கணேசன், சென்னை மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், எம்எல்ஏக்கள் பரந்தாமன், த.வேலு, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழக தலைவர் காஜா முகைதீன், தமிழ்நாடு வக்ஃபு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், அமைப்பு செயலாளர் ஆதிராஜாராம், மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளர் தமீம் அன்சாரி உள்ளிட்டோர் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, அசன் மவுலானா எம்எல்ஏ, மத்திய சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன், துணை தலைவர் எஸ்.எம்.இதயத்துல்லா, சட்டத் துறை இணை தலைவர் எஸ்.கே.நவாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் என்.ஆனந்த், தென்சென்னை மாவட்ட தலைவர் தி.நகர் க.அப்புனு உள்ளிட்ட நிர்வாகிகளும் மரியாதைசெலுத்தினர்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தனது சமூக வலைதள பதிவில், ‘அரசியலிலும், தான் சார்ந்த இயக்கத்திலும் நேர்மை,துணிவுடன் இயங்கிய மாமனிதர் காயிதே மில்லத்தின் தன்னலமற்ற தூய்மையான அரசியல் செயல்பாடுகளை எந்நாளும் நினைவில் வைத்து போற்றுவோம்’ என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x