

கோவை: கோவை மக்களவைத் தொகுதியில் 4 லட்சம் வாக்குகளுக்கு மேல் பெற்று பாஜக, தனது வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கோவை மக்களவைத் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாஜக கடந்த 1998-ல் வெற்றி பெற்றது. பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறை எம்பி ஆனார். திமுக வேட்பாளர் கே.ஆர்.சுப்பையனை எதிர்த்து 4,49,269 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு 13 மாதங்களில் கவிழ்ந்தது.
தொடர்ந்து 1999-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு சி.பி.ராதாகிருஷ்ணன் மீண்டும் எம்.பி. ஆனார். அவரை எதிர்த்துபோட்டியிட்ட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.நல்லக்கண்ணுவை 54,077 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
2004 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக சார்பில் மூன்றாவது முறையாகப் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுப்பராயனிடம் தோல்வி அடைந்தார். தொடர்ந்து 2014-ல் 4-வது முறை பாஜக சார்பில், கூட்டணியின்றி போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், அதிமுக வேட்பாளர் நாகராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்து இரண்டாம் இடத்தை பிடித்தார்.
பின்னர் 2019-ல் அதிமுக கூட்டணியில் ஐந்தாவது முறையாக பாஜக சார்பில் போட்டியிட்ட சி.பி.ராதாகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பி.ஆர்.நடராஜனிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
தற்போது, 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகி பாஜக சார்பில் மாநில தலைவர் அண்ணாமலை, கோவை தொகுதியில் போட்டியிட்டு 4 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று 2-ம் இடத்தைப்பிடித்துள்ளார். பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணியில் இடம்பெறாமல், பாமக உள்ளிட்ட சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக, இவ்வளவு வாக்குகளை பெற்றதன் மூலம் கோவையில் அதன் வாக்கு வங்கி அதிகரித்துள்ளதை காட்டுகிறது.