ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அரசியல் எதிர்காலம் என்ன?

ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்
ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன்
Updated on
1 min read

சென்னை: ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, முதல்வரான பன்னீர்செல்வம், சசிகலாவை எதிர்த்ததால் முதல்வர் பதவியை இழந்தார். சசிகலா சிறை செல்ல நேரிட்டதால், சசிகலாவின் ஆதரவாளரான பழனிசாமியை முதல்வராக்கினார்.

பின்னர் பழனிசாமி சசிகலாவுக்கு எதிராக செயல்பட்டார். அதன் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியின் தலையீட்டால், பன்னீசெல்வம் கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராக பழனிசாமியும் நியமிக்கப்பட்டனர்.

கட்சியில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், கட்சியின் பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதன் பிறகு பல்வேறு நீதிமன்றங்களின் படி ஏறியும் பழனிசாமிக்கு ஆதரவாகவே தீர்ப்புகள் வந்தன.

கட்சி பெயர், கொடி, கரை வேட்டியை கூட பயன்படுத்த முடியாத நிலையில் ஓபிஎஸ் உள்ளார். அதிமுகவை பழனிசாமியிடம் இருந்து மீட்க அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவை தொடங்கி தர்மயுத்தம் 2.0 நடத்தி வருகிறார்.

தொடர்பில்லாத தொகுதி: பாஜக கூட்டணியில் அவருக்கு தொடர்பில்லாத ராமநாதபுரம் தொகுதி ஒதுக்கப்பட்டது. அங்கு சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்துள்ளார். இது அவரை நம்பி இருக்கும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஓபிஎஸ்ஸின் அரசியல் எதிர்காலம் என்னவாகும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, அமமுக என்ற தனி கட்சியை நடத்தி வரும் டிடிவி தினகரனும் பாஜக கூட்டணியில் இணைந்து, 2 தொகுதிகளில் போட்டியிட்டார். தேனி தொகுதியில் போட்டியிட்ட தினகரன், தனது சிஷ்யனான தங்கதமிழ்ச்செல்வனிடமே தோல்வியை தழுவியுள்ளார். அவரது கட்சி சார்பில் திருச்சியில் நிறுத்தப்பட்ட வேட்பாளரும் தோற்றுள்ளார்.ஏற்கெனவே 2021 சட்டப்பேரவை தேர்தலிலும் கோவில்பட்டி தொகுதியில் தினகரன் தோற்றார்.

இந்நிலையில், பழனிசாமிக்கு எதிராக அரசியல் செய்து வரும் பன்னீர்செல்வமும் தினகரனும் இந்தத் தேர்தலில் தோற்றிருப்பது, அவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அடுத்தகட்ட நடவடிக்கை? இவர்கள் அரசியலில் வருங்காலங்களில் எழுவார்களா அல்லது வீழ்வார்களா என்பதை அவர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளே தீர்மானிக்கும் என கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in