

வாடகை கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு வணிக ஓட்டுநர் உரிமம் (பேட்ஜ்) இனி தேவையில்லை என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை பின்பற்ற மாநில அரசுகளுக்கு மத்திய போக்குவரத்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.
சைக்கிள், பேட்டரி பயன்பாட்டு வாகனங்கள் தவிர மற்ற எந்தவொரு வாகனத்தை இயக்கவும் ஓட்டுநர் உரிமம் மிகவும் அவசியம். தமிழகத்தை பொறுத்தமட்டில், தற்போது சொந்த வாகனங்கள் இயக்குபவர்களை விட வணிக வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்களின் எண்ணிக்கை அதிகம். வாழ்வாதாரத்துக்காக வாகனம் ஓட்டும் இவர்கள், சாதாரண இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமத்தை பெற்ற பின், வணிக வாகனங்களை இயக்குவதற்கான உரிமத்தை பெற வேண்டும். இவற்றையும் தவிர்த்து கனரக வாகனங்களை இயக்கினால் அதற்கான தனி உரிமத்தை பெற வேண்டும்.
இந்த உரிமம் பெற குறிப்பிட்ட கால இடைவெளி வகுக்கப்பட்டுள்ளது. இதன்படி ஓட்டுநர் உரிமம் பெற்று 6 மாதத்துக்கு மேல்தான் வணிக ஓட்டுநர் உரிமம் (பேட்ஜ்) பெற முடியும். அதை பெற்றுவிட்டால் அடுத்த 3 ஆண்டுகள் கழித்துதான் கனரக வானகங்களை ஓட்டுவதற்கான உரிமம் பெற முடியும்.
இந்நிலையில், தற்போது வணிக வாகன ஓட்டுநர் உரிமம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை சுட்டிக்காட்டி, அதை பின்பற்றும்படி மாநில அரசுகளுக்கு மத்திய போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, வாடகைக் கார், ஆட்டோ, வணிக ரீதியிலான இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு இனி வணிக ஓட்டுநர் உரிமம் அவசியமில்லை. ஓட்டுநர் உரிமம் வைத்திருந்தாலே போதும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கனரக வாகன ஓட்டிகள் இந்த வணிக ஓட்டுநர் உரிமம் பெறுவது மிகவும் அவசியம் என்றும் அந்த அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இந்த அறிவிப்பால், லட்சக்கணக்கான ஓட்டுநர்களுக்கு வேலை கிடைக்கும். அதே நேரம், ‘வணிக ஓட்டுநர் உரிமம்’ வழங்குவதில் நடைபெற்று வந்த ஊழலும் தடுக்கப்படும் என மத்திய போக்குவரத்து அமைச்சகம் நம்புகிறது. அதே நேரம், சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை பெருக வாய்ப்புள்ளது என்றாலும், தனிநபர் பயன்பாட்டு வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கமும் மத்திய அரசிடம் உள்ளது.
இது தொடர்பாக, தனியார் பள்ளி வாகன ஓட்டுநர் அருண் கூறும்போது, “ வணிக ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டாம் என்பது வரவேற்கத்தக்கதுதான். அதேநேரம், அனுபவமின்மை காரணமாக பலரும் விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதை தவிர்க்க ஓட்டுநர் உரிமத்தை முறைப்படுத்த வேண்டும்’’ என்றார்.
இது தொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரி ‘தி இந்து’விடம் கூறும்போது, “இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற எந்த கல்வித் தகுதியும் இல்லை. ஆனால் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே வணிக ஓட்டுநர் உரிமம் மற்றும் அதைத் தொடர்ந்து கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற முடியும். சிலர் ரூ.40 ஆயிரம் வரை செலவழித்து 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றதாக சான்றிதழ் வாங்கி வருகின்றனர். இதனால், வணிக ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கும் போது கல்விச் சான்றிதழை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு அனுப்பி அதை உறுதிப்படுத்திய பின்னரே தற்போது வணிக ஓட்டுநர் உரிமம் வழங்கி வருகிறோம். வணிக ஓட்டுநர் உரிமம் வேண்டாம் என்ற புதிய நடைமுறை அமலுக்கு வந்தால், இந்த சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும்’’ என்றார்.