

சென்னை: ‘இண்டியா’ கூட்டணி கட்சிகள் அதிக தொகுதிகளில் முன்னிலையில் இருப்பதாக தகவல் வந்தவுடன், அண்ணா அறிவாலயம் மற்றும் சத்தியமூர்த்தி பவனில் திமுக, காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதி மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளுக்குமான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது. ஆரம்பம் முதலே திமுக, காங்கிரஸ் அங்கம் வகிக்கும் ‘இண்டியா’ கூட்டணி பல இடங்களில் முன்னிலையில் வரத் தொடங்கியது.
சரிசமமான நிலை: இந்நிலையில், திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் காலை 9 மணி முதல் தொண்டர்கள் வரத் தொடங்கினர். அப்போது நாடு முழுவதும், பாஜக கூட்டணிக்கு சரிசமமாக இண்டியா கூட்டணியும் முன்னிலையில் வரத் தொடங்கியது. இதற்கிடையே, வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி பின்னடைவு என்ற செய்தி வந்தது.
ஆட்டம், பாட்டு, சரவெடி: இதையடுத்து, பிரதமருக்கு எதிராகவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு ஆதரவாகவும் வாழ்த்துக் கோஷங்களை தொண்டர்கள் எழுப்பினர். தமிழகத்தில் திமுக கூட்டணி கட்சிகள் முன்னிலை அதிகரிக்கத் தொடங்கியதும், தொண்டர்கள் மேலும் உற்சாகமடைந்தனர்.
தொடர்ந்து, மேளம் இசைக் கலைஞர்களை உள்ளூர் நிர்வாகிகள் அழைத்துவர, ஆட்டம், பாட்டு, சரவெடி என களை கட்டியது அண்ணா அறிவாலயம்.
இதற்கிடையில், ஒரு தொண்டர், ஒரு கறுப்பு ஆட்டின் கழுத்தில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலையின் படத்தை கட்டி எடுத்து வந்து, மாம்பழத்தை பிழிந்து, அந்த ஆட்டுக்கு அபிஷேகம் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
சத்தியமூர்த்தி பவன்: தேசிய அளவிலும், தமிழக அளவிலும் இண்டியா கூட்டணியின் முன்னணி நிலவரம் தெரியத் தொடங்கியதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனுக்கு வரத் தொடங்கினர். அலுவலகத்தில் பெரிய எல்இடி திரை அமைக்கப்பட்டு, அதில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒளிபரப்பப்பட்டது.
தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை காலை9.30 மணிக்கு வந்தார். அப்போது தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 200 தொகுதிகளில் இண்டியா கூட்டணி முன்னிலை என செய்தி வந்தது. அதைப் பார்த்து காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகலில், அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.