Published : 05 Jun 2024 05:35 AM
Last Updated : 05 Jun 2024 05:35 AM

சென்னையில் 3 தொகுதிகளில் மீண்டும் வெற்றி பெற்ற திமுக

சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள 3 மக்களவை தொகுதிகளை திமுக மீண்டும் கைப்பற்றியது. சென்னை மாவட்டத்தில் உள்ளவட சென்னை, மத்திய சென்னை,தென் சென்னை தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

வட சென்னை மக்களவை தொகுதியில் பதிவான வாக்கு இயந்திரங்கள் ராணி மேரி கல்லூரியிலும், மத்திய சென்னை வாக்கு இயந்திரங்கள் லயோலா கல்லூரியிலும்,தென் சென்னை தொகுதி வாக்குஇயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகத்திலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தன. அவற்றை பாதுகாக்கும் பணியில் 1,384 பாதுகாப்புப் படை வீரர்கள் மற்றும் போலீஸார் ஈடுபடுத்தப்பட்டனர்.

நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இப்பணியில் வட சென்னையில் 357 பேர், தென் சென்னையில் 374 பேர், மத்திய சென்னையில் 380 பேர் மற்றும் 322 அலுவலக உதவியாளர்கள் உட்பட மொத்தம்1,433 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதனைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.

வட சென்னை தொகுதியில் மொத்தம் 14 லட்சத்து 96 ஆயிரத்து 224 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 8,99,367 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். இதில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி 4,96,485 வாக்குகள், அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ 1,57,761 வாக்குகள், பாஜக வேட்பாளர் பால்கனகராஜ் 1,13,085 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் வினோதினி 95,783 வாக்குகள்பெற்றனர். திமுக வேட்பாளர் 3,38,724 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

தென் சென்னை தொகுதியில் மொத்தம் உள்ள 20,23,133 வாக்காளர்களில் 10,96,026 பேரின் வாக்குகள் பதிவாயின. திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 5,13,974 வாக்குகள், பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் 2,89,019 வாக்குகள், அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் 1,71,274 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தமிழ்செல்வி 83,391 வாக்குகள் பெற்றுள்ளனர்.

திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், நேற்று இரவு 10 மணி நிலவரப்படி 2,24,955 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருந்தார். மத்திய சென்னை தொகுதியில் மொத்தம் 13,50,161 வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் 7,30,602 பேர் வாக்களித்திருந்தனர்.

திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 4,13,485 வாக்குகள், பாஜக வேட்பாளர் வினோஜ் பி.செல்வம் 1,69,121 வாக்குகள், தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதி 71,951 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் 46,013 வாக்குகள் பெற்றுள்ளனர். திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 2,44,364 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x