Published : 05 Jun 2024 06:20 AM
Last Updated : 05 Jun 2024 06:20 AM

திருவள்ளூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வெற்றி

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சசிகாந்த் செந்திலுக்கு திருவள்ளூர் மாவ ட்ட தேர்தல் அலுவலர் பிரபுசங்கர் வழங் கினார்.

திருவள்ளூர்: திருவள்ளூர்(தனி) மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.திருவள்ளூர் (தனி)மக்களவை தொகுதியில், சசிகாந்த் செந்தில் (காங்கிரஸ்), கு.நல்லதம்பி (தேமுதிக), பொன்.வி.பாலகணபதி (பாஜக), மு.ஜெகதீஷ் சந்தர் (நாம் தமிழர் கட்சி), து.தமிழ்மதி (பகுஜன்சமாஜ் கட்சி உள்ளிட்ட 8 கட்சிகளின் வேட்பாளர்கள், 6 சுயேச்சை வேட்பாளர்கள் என, 14 பேர் போட்டியிட்டனர். 2,256 வாக்கு சாவடிகளில் நடைபெற்ற வாக்குப் பதிவில் 14,30,738 (68.59 சதவீதம்) வாக்குகள் பதிவாகின.

இந்நிலையில், திருவள்ளூர் (தனி) மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை நேற்று திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டுவில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த வாக்கு எண்ணிக்கை, 39 பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் உள்ளூர் போலீஸார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், ஆயுதப் படை போலீஸார், வெடிகுண்டு கண்டுபிடித்தல் மற்றும் செயலிழக்க பிரிவு நிபுணர்கள் அடங்கிய ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் என, 4அடுக்கு பாதுகாப்பு மற்றும் 228 கண்காணிப்பு கேமராக்கள் சகிதம் நடைபெற்றது.

34 சுற்றுகளாக நடைபெற்ற இந்த வாக்குப் பதிவு, 712 வாக்கு எண்ணிக்கை அலுவலர்கள், 201 வாக்கு எண்ணிக்கை மேற்பார்வையாளர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை உதவியாளர்கள், 102 நுண்பார்வையாளர்கள் மூலம் நடைபெற்றது.

காலை 8 மணியளவில் தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கப்படும் எனவும், 8,30 மணியளவில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும் எனவும் தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், தபால் வாக்குகள் எண்ணும் பணி அரை மணி நேரம் தாமதமாக தொடங்கியது. இதனால், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 9 மணியளவில் தான் தொடங்கியது.

தொடக்கம் முதலே காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் முன்னிலையில் இருந்து வந்தார். இரவு 6.50 மணியளவில் முடிவுக்கு வந்த இந்த வாக்கு எண்ணிக்கையில், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவர், பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதியை விட 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக வேட்பாளர் பொன்.வி.பாலகணபதி 2,24,801 வாக்குகள் பெற்று 2-ம் இடமும், தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, 2,23,904 வாக்குகள் பெற்று 3-ம் இடமும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எம்.ஜெகதீஷ்சந்தர் 1,20,838 வாக்குகள் பெற்று 4-ம் இடமும் பெற்றுள்ளனர். நோட்டாவில் 18,978 வாக்குகள் பதிவாகின.

தொடர்ந்து, தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சசிகாந்த் செந்திலுக்கு, திருவள்ளூர் மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான பிரபுசங்கர் வழங்கினார். அப்போது, திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கான பார்வையாளர் (பொது) அபு இம்ரான், ஆவடி, பூந்தமல்லி, கும்மிடிப்பூண்டி,பொன்னேரி எம்எல்ஏக்கள் சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி, டி.ஜெ.கோவிந்தராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x