Published : 29 Apr 2018 08:31 AM
Last Updated : 29 Apr 2018 08:31 AM

குட்கா ஊழல் குற்றச்சாட்டில் அமைச்சர் பதவி விலகக் கோரி விஜயபாஸ்கரின் வீட்டை முற்றுகையிட முயற்சி: புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் திமுகவினர் கைது

குட்கா ஊழல் குற்றச்சாட்டுக்குள்ளாகி உள்ள மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டை நேற்று முற்றுகையிட முயன்ற திமுகவினர் 765 பேரை போலீஸார் கைது செய்தனர்.

அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் காவல் துறை அலுவலர்கள் மீதான குட்கா வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் உடனே பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் வீட்டை திமுகவினர் முற்றுகையிட உள்ளதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீட்டைச் சுற்றிலும் திருச்சி டிஐஜி லலிதாலெட்சுமி தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இலுப்பூர் கோட்டைத் தெருவில் நேற்று ஒன்றுதிரண்ட திமுகவினர் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், அமைச்சர் விஜயபாஸ்கர் பதவி விலகக் கோரி கோஷமெழுப்பியபடி பதாகைகளை ஏந்திக்கொண்டு, அங்கிருந்து அமைச்சரின் வீட்டை முற்றுகையிட ஊர்வலமாக புறப்பட்டனர்.

இலுப்பூர் பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் எஸ்.செல்வராஜ் தலைமையிலான போலீஸார், அமைச்சரின் வீட்டை முற்றுகையிட முயன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ரகுபதி, சிவ.வீ.மெய்யநாதன், வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.எம்.பாலு, இலக்கிய அணி துணை அமைப்பாளர் பழனியப்பன் உட்பட 765 பேரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில், சென்னையில் இருந்து நேற்று அதிகாலை புதுக்கோட்டைக்கு வந்த அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தனது சொந்த ஊரான இலுப்பூருக்குச் செல்லாமல் புதுக்கோட்டையில் உள்ள விருந்தினர் மாளிகையில் தங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x