

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை மையத்தில் கடும் சோதனைகளுக்குப் பிறகே அரசு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளை போலீஸார் அனுமதித்தனர்.
காஞ்சிபுரம் (தனி) மக்களவை தொகுதியில் பதிவான வாக்குகள், பொன்னேரி கரை பகுதியில் உள்ள அண்ணா பல்கலையின் பொறியியல் கல்லூரியில் எண்ணப்படுகிறது. இந்நிலையில், மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் இன்று நடைபெற்று வருகிறது. இதற்காக மாவட்ட தேர்தல் அலுவலகம் சார்பில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ள அரசு பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் வாக்கு எண்ணும் மையத்துக்கு அதிகாலை முதல் வரத் தொடங்கினர்.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் அரசு பணியாளர்கள் அனைவரும் போலீஸாரின் கடுமையான சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். செல்போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கவில்லை. இதனால், ஸ்மார்ட் வாட்ச் வைத்திருந்தவர்கள் வெளியில் உள்ள தங்களுக்கு தெரிந்த நபர்களிடம் வாட்ச்சை வழங்கிவிட்டு வாக்கு எண்ணும் மையத்துக்குள் சென்றனர். ஒரு சில அதிகாரிகள் போலீஸாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.