Published : 04 Jun 2024 05:26 AM
Last Updated : 04 Jun 2024 05:26 AM

கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா கொண்டாட்டம்: சோனியா காந்தி, முதல்வர் ஸ்டாலின் மரியாதை

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலை ஓமந்தூரார் வளாகத்தில் அவரது சிலைக்கு அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். படம்: ம.பிரபு

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, அவரது நினைவிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். டெல்லியில் நடந்த விழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, 12 சிறப்பு குழுக்கள் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டு, பொதுமக்கள், மாணவ, மாணவிகள், மகளிர் என அனைத்து தரப்பினராலும் கருணாநிதி நூற்றாண்டு விழா கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று காலை 8.45 மணிக்கு சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து, செய்தி மக்கள் தொடர்புதுறையின், ‘தமிழரசு’ வாயிலாக தயாரிக்கப்பட்ட கருணாநிதி நூற்றாண்டு மலரின் 3 தொகுதிகளை முதல்வர் வெளியிட, அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார். நினைவிட வளாகத்தில் செய்தித் துறையால் அமைக்கப்பட்ட, கருணாநிதி நூற்றாண்டு நிறைவு நினைவலைகள் என்ற சிறப்பு புகைப்பட கண்காட்சியை முதல்வர் பார்வையிட்டார். கருணாநிதி வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், செயல்படுத்திய அரசுத் திட்டங்கள் அடங்கிய குறும்படத்தை பார்வையிட்டார்.

பிறகு, ஓமந்தூரார் அரசினர் தோட்டம், கோடம்பாக்கத்தில் முரசொலி அலுவலக வளாகம் மற்றும் அறிவாலயத்திலும் கருணாநிதி சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, கோபாலபுரம் மற்றும் சிஐடி நகரில் உள்ள கருணாநிதியின் வீடுகளில் அவரதுபடத்துக்கு முதல்வர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சிஐடி நகரில் கருணாநிதியின் துணைவியார் ராசாத்தி அம்மாள், கனிமொழி எம்.பி. ஆகியோர் பங்கேற்றனர்.

அனைத்து நிகழ்வுகளிலும் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், ஆ.ராசா உள்ளிட்ட எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், சென்னை மேயர் ஆர்.பிரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சோழிங்கநல்லூர் எம்எல்ஏ ச.அரவிந்த்ரமேஷ் ஆகியோர் ஏற்பாட்டின் பேரில், வேளச்சேரி குருநானக் கல்லூரி கலையரங்கில், காலை10 மணிக்கு, கூட்டணிக் கட்சி தலைவர்கள் பங்கேற்ற வாழ்த்தரங்கம், மாலையில் இசையரங்கம், கவியரங்கம் ஆகியவை நடைபெற்றன.

திமுக சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ, தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் பொதுச் செயலாளர் மு.சண்முகம், பொருளாளர் கி.நடராஜன் ஆகியோர் தலைமையில் அந்தந்த அணிகள் சார்பில் கருணாநிதி பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்: தமிழகம் முழுவதும் கருணாநிதியின் படத்துக்கு நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

முதல்வர் ஸ்டாலின் தனது வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: சோனியா காந்தி, ராகுல் காந்தி, பரூக்அப்துல்லா, சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட இண்டியா கூட்டணி தலைவர்கள் டெல்லியில் ஒன்றுகூடி, கருணாநிதி நூற்றாண்டு நிறைவில் மரியாதை செலுத்திய இந்நாளில், அவரைஒரு தேசிய தலைவராகப் போற்றி வணங்குகிறோம்.

அவரது நூற்றாண்டு நிறைவில் பெற்ற புது உத்வேகத்துடன், ஜூன் 4-ம் தேதி நமது கூட்டணி,இந்திய மக்களுக்கான வெற்றியை கொண்டாட எதிர்நோக்கியுள்ளோம்.

இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

கருத்து கணிப்புக்கு மாறாகவே தேர்தல் முடிவு: சோனியா கருத்து

புதுடெல்லி: டெல்லியில் உள்ள திமுக அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், கருணாநிதி படத்துக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘கருணாநிதி பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழாவில் திமுகவை சேர்ந்த எனது தோழர்களுடன் பங்கேற்பதில் மகிழ்ச்சி. பல சந்தர்ப்பங்களில் கருணாநிதியை சந்தித்து, அவர் சொல்வதை கேட்டு, அவரது ஞான வார்த்தைகள், அறிவுரைகளால் பயன்பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அவரை சந்தித்தது எனக்கு அதிர்ஷ்டம்’’ என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘பொறுத்திருந்து பாருங்கள். தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் இருக்கும்’’ என்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய பொதுச் செயலாளர் டி.ராஜா, தேசிய மாநாட்டுக் கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோரும் கருணாநிதி படத்துக்கு மரியாதை செலுத்தினர். திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா எம்.பி. ஆகியோர் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x