Published : 04 Jun 2024 05:20 AM
Last Updated : 04 Jun 2024 05:20 AM
சென்னை: சென்னையில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்றகடைக்கு சீல் வைத்த நிலையில், கர்நாடகாவில் இருந்துதாய்ப்பால் பெற்று பவுடராக்கி மற்றுமொரு மருந்து விற்பனையகத்தில் விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாதவரத்தில் உள்ள தனியார் மருந்து விற்பனையகத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பனை செய்யப்பட்டு வந்ததையடுத்து, அக்கடைக்கு உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் சீல் வைத்தனர்.
தொடர்ந்து மாநிலம் முழுவதும் தாய்ப்பால் விற்பனை செய்வது குறித்த விசாரணை மற்றும் கண்காணிப்பை உணவுபாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியதுடன், சென்னையில் 18 குழுக்கள் அமைத்து தொடர்ந்து சோதனைநடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை அரும்பாக்கம் கோல பெருமாள் பள்ளி தெருவில் அமைந்துள்ள தனியார் மருந்து மொத்தவிற்பனையகத்தில் சட்டத்துக்கு புறம்பாக தாய்ப்பால் விற்கப்படுவதாக உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ்குமார் தலைமையில் அதிகாரிகள் குழு அந்நிறுவனத்தின் கிடங்கில் நேற்றுகாலை திடீர் சோதனை மேற்கொண்டனர்.
இதில் 50 மி.லி. அளவு கொண்ட 380-க்கும் மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் அடைக்கப்பட்டு சட்ட விரோதமாக விற்கப்படுவது தெரியவந்தது. குறிப்பாக புதிய முறையில் தாய்ப்பாலை பவுடர் வடிவில் பதப்படுத்தி, குளிர்ச்சியாக்கி 5 கிராம் பாக்கெட்டுகளில் (-10 டிகிரி செல்சியஸில்) அடைத்து விற்கப்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் 800 பாக்கெட்டுகள் கையிருப்பாக இருப்பது தெரியவந்தது.
இவற்றின் மாதிரிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்க்கு ஆய்வுக்காக அனுப்பிவைத்தனர். முதல்கட்ட விசாரணையில் தகுந்தஉரிமமும் பெறாமல், மருத்துவத்துறை அனுமதியின்றி இந்நிறுவனம் சட்டவிரோதமாக தாய்ப்பாலை விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. தாய்ப்பால் பாட்டில்கள் அடங்கியகுளிரூட்டப்பட்ட பெட்டிக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இது தொடர்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்த மருந்து விற்பனையகத்தில் தாய்ப்பாலை கர்நாடகாவில் உள்ள பிரபல நிறுவனத்திடம் இருந்து கொள்முதல் செய்து, ஒராண்டுக்கு மேலாக சென்னையில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு விற்பனை செய்து வந்துள்ளனர். மருத்துவமனைகளின் பெயர்பட்டியல் பெறப்பட்டுள்ளது.
மேலும் ஒராண்டுக்கு தாய்ப்பால் கெட்டுபோகாது என்றும்லேபிளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையொட்டி சேகரிக்கப்பட்ட மாதிரிகளின் ஆய்வு முடிவுகள் வரும்போது, அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கப்படும். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT