Published : 04 Jun 2024 06:02 AM
Last Updated : 04 Jun 2024 06:02 AM

பெருங்களத்தூர் - செங்கை பறக்கும் சாலை திட்டத்தை கைவிட கூடாது: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை கைவிடக் கூடாது. அதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையை தென் மாவட்டங்களுடன் இணைக்கும் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்குடன் தயாரிக்கப்பட்ட பெருங்களத்தூர் - செங்கல்பட்டு இடையே 27 கிமீ நீளத்துக்கு 6 வழி பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்தை கைவிட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் திட்டமிட்டிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

பறக்கும் சாலை அமைக்கும் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாக ரூ.3,523 கோடி செலவாகும் என்றும், இவ்வளவு செலவில் பறக்கும் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், அதற்காக பறக்கும் சாலையை பயன்படுத்துவோரிடமிருந்து அதிக சுங்கக் கட்டணம் வசூலிக்க வேண்டியிருக்கும் என்பதால் இந்தத் திட்டத்தைக் கைவிட தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தீர்மானித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்கு மாற்றாக கிளாம்பாக்கம் முதல் பொத்தேரி வரை 7 கிமீ தொலைவுக்கு மட்டும் பறக்கும் சாலை அமைக்கவும், மறைமலை நகர், ஃபோர்டு கார் ஆலை, சிங்கப்பெருமாள் கோயில், மகிந்திரா சிட்டி ஆகிய இடங்களில் மேம்பாலங்களை அமைக்கவும் ஆணையம் திட்டமிட்டிருக்கிறது. இது எதிர்பார்த்த பயனை அளிக்காது.

ஜிஎஸ்டி சாலையில் ஒவ்வொரு நாளும் ஒன்றரை கோடி வாகனங்கள் பயணிக்கின்றன. விடுமுறை நாள்களில் பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் போதும், சென்னைக்கு திரும்பும் போதும் இந்த எண்ணிக்கை 50 சதவீதம் வரை அதிகரிக்கிறது. அத்தகைய தருணங்களில் செங்கல்பட்டு முதல் சென்னை வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது.

இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படும் நிலையில், எதிர்காலத்திலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவது தான் ஒரே தீர்வாக இருக்கும்.

சாலைகள்தான் நாட்டின் வளர்ச்சிக்கான பாதைகள் ஆகும். சாலைகள் போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் திட்ட மதிப்பீடு என்பது ஒரு தடையாக இருக்கக்கூடாது.

பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதால் கிடைக்கும் வளர்ச்சி மற்றும் பொருளாதாரப் பயன்களுடன் ஒப்பிடும்போது, அத்திட்டத்துக்கான செலவு என்பது மிகவும் குறைவுதான். இதைக் கருத்தில் கொண்டு பெருங்களத்தூர் - செங்கல்பட்டு பறக்கும் சாலைத் திட்டத்தை எந்த மாற்றமும் செய்யாமல் செயல்படுத்த வேண்டும். அதற்கான செலவை மத்திய, மாநில அரசுகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x