Published : 04 Jun 2024 05:30 AM
Last Updated : 04 Jun 2024 05:30 AM
சென்னை: ஜப்பான் நாட்டின் புதிய துணை தூதராக பதவியேற்றுள்ள டகாஹஷி முனியோவுக்கு சென்னையில் நேற்று வரவேற்பு அளிக்கப்பட்டது. சென்னை மயிலாப்பூரில் இந்திய - ஜப்பானிய தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வர்த்தக சபையின் தலைவர் இம்பிசம்மட் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக ‘தி இந்து’ குழுமத்தின் கஸ்தூரி அன்ட் சன்ஸ் இயக்குநர் என்.ரவி கலந்து கொண்டார்.
நிகழ்வில் இந்திய-ஜப்பானிய தொழில் மற்றும் வர்த்தக சபை சார்பில், ஜப்பான் துணை தூதருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து வர்த்தக சபை சார்பில் நடைபெற்ற 40 மணிநேர கோடைகால வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு துணை தூதர் டகாஹஷி சான்றிதழ்களை வழங்கினார்.
இந்தியாவுடன் வலுவான உறவு: பின்னர் அவர் பேசுகையில், “இதற்கு முன்னாள் தென் கிழக்கு ஆசியா, மத்திய கிழக்கு ஆசியா உள்பட 8 நாடுகளில் பணியாற்றியுள்ளேன். இந்தியாவில் பணியாற்றுவது இதுவே முதல்முறை. குறிப்பாக சென்னையில் பணியாற்ற இருப்பதை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
அரசியல், பாதுகாப்பு, வணிகம் என அனைத்து துறைகளிலும் ஜப்பான் மற்றும் இந்திய நாடுகளிடையே வலுவான உறவு இருந்து வருகிறது. இந்த இரு நாடுகளும் இணைந்து மேலும் செயலாற்றும்போது பல்வேறு துறைகளில் பொருளாதார ரீதியாக இரு நாடுகளும் வளர்ச்சி அடையும்” என்றார்.
சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ‘தி இந்து’ குழுமத்தின் கஸ்தூரி அன்ட் சன்ஸ் இயக்குநர் என்.ரவி பேசுகையில், “தமிழகம்-ஜப்பான் இரண்டுக்கும் இடையே சிறந்த இணைப்பு எப்போதும் உண்டு. அதேபோல தமிழ் மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் கூட சில ஒற்றுமைகள் இருக்கும்.
அந்தவகையில் ஜப்பான் -இந்தியா நாடுகளுக்கு இடையே கலாச்சார பரிமாற்றம் எப்போதும் சிறப்பாகவே இருந்து வருகிறது. ஜப்பான் வெளியுறவு கொள்கையில் மிகச் சிறந்த அனுபவத்தை பெற்றுள்ளார் டகாஹஷி. அவரை துணை தூதராக நாம் பெற்றிருப்பதற்கு மகிழ்ச்சி அடைய வேண்டும்” என்றார்.
இந்நிகழ்வில் ஜப்பான் துணை தூதரின் மனைவி மிட்சுயோ டகாஹஷி, இந்திய-ஜப்பானிய தொழில் மற்றும் வர்த்தக சபையின் தலைவர் என்.குமார், பொது செயலாளர் சுகுனா ராமமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT