சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை கண்காணிக்க ஆணையம்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு 

சாதி, மத ரீதியாக வாக்கு சேகரிப்பதை கண்காணிக்க ஆணையம்: சென்னை ஐகோர்ட்டில் வழக்கு 
Updated on
1 min read

சென்னை: சாதி, மத மொழி ரீதியாக வாக்கு சேகரிக்கும் ஊழல் நடவடிக்கையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய சுதந்திரமான ஆணையம் அமைக்கக் கோரிய வழக்கில், இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், வேலூர் மாவட்டம், சத்துவாச்சாரியைச் சேர்ந்த ராஜேஷ் அனூர் மகிமைதாஸ் என்பவர் தாக்கல் செய்திருந்த பொதுநல மனுவில், “சாதி, மதம் மற்றும் மொழி ரீதியாக வாக்குகளை சேகரிப்பது ஊழல் நடவடிக்கை என்பதால் அதை ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

வெறுப்புப் பேச்சுக்களைக் கட்டுப்படுத்த மாநில அரசுகளும், தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. ஆனால் தேர்தல் நேரங்களிலும், தேர்தல் அல்லாத காலங்களிலும் பதிவு செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அக்கட்சிகளைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் தங்களின் அரசியல் சுயலாபத்துக்காக சாதி, மதம், மொழி ரீதியாக வாக்காளர்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி வருகின்றன.

நாடு சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகும், அரசியல் கட்சிகள் பிரித்தாளும் கொள்கையை பயன்படுத்தி மக்களிடம் ஆதாயம் தேடி வருவது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது.

தேர்தல் நேரங்களில் மட்டும் இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க நடவடிக்கை எடுக்கும் தேர்தல் ஆணையம், தேர்தல் முடிந்தபிறகு இந்த நடவடிக்கைகளை தடுக்க எந்த ஒழுங்குமுறைகளையும் பின்பற்றுவது இல்லை.

இதுதொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து பொதுமக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்க வேண்டும். அந்த தீர்ப்புகளை அமல்படுத்துவதைக் கண்காணிக்க, ஓய்வு பெற்ற நீதிபதிகள், மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய சுதந்திரமான ஆணையத்தை அமைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என அதில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த மனுவுக்கு தேர்தல் ஆணையம் ஆறு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in