

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களில் பயணிகள் எளிதாக டிக்கெட் எடுக்கும் விதமாக, 42 நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளன. இதுதவிர, டிக்கெட் வழங்கும் உறுப்பினர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.
ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் வாயிலாக முன்பதிவு இல்லாத டிக்கெட் பெறும் வசதி சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. கரோனா பாதிப்பின்போது, இந்த சேவை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ரயில் சேவை தொடங்கிய பிறகு, தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் படிப்படியாக தொடங்கப்பட்டது.
தெற்கு ரயில்வேயில் தற்போது 166 இடங்களில் 353 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் உள்ளன. அதிகபட்சமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் 63 இடங்களில் 128 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் இருக்கின்றன. பல்வேறு ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதன்காரணமாக, இதை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, அந்தவகையில், சென்னை ரயில்வே கோட்டத்தில் தாம்பரம், மாம்பலம், வேளச்சேரி, கிண்டி, எழும்பூர், பெரம்பூர், மயிலாப்பூர், சேப்பாக்கம் உள்பட 42 ரயில் நிலையங்களில் 100 தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர, ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர்கள், தனியார் நபர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் நிலையங்களில் எளிதாக டிக்கெட் எடுக்கும் விதமாக, சென்னை ரயில்வே கோட்டத்தில் 42 ரயில் நிலையங்களில் தானியங்கி டிக்கெட் வழங்கும் இயந்திரம் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், டிக்கெட் வழங்கும் ஊழியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம், அரக்கோணம், ஆவடி, செங்கல்பட்டு, பெரம்பூர், மாம்பலம், கூடுவாஞ்சேரி உள்பட 42 ரயில் நிலையங்களில் டிக்கெட் வழங்கும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கு 3 சதவீதம் கழிவுதொகை வழங்கப்படும். விண்ணப்பத்தை ஜூன் 20-ம் தேதி மதியம் 3 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். இது தொடர்பான கூடுதல் விவரம் தெற்கு ரயில்வே இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.