பயிர் கடன் பெற சாகுபடி சான்றை கட்டாயமாக்குவதா? - கூட்டுறவுத் துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்

பயிர் கடன் பெற சாகுபடி சான்றை கட்டாயமாக்குவதா? - கூட்டுறவுத் துறைக்கு விவசாயிகள் சங்கம் கண்டனம்
Updated on
1 min read

சென்னை: சாகுபடிச் சான்று கொடுத்தால் மட்டுமே பயிர்க் கடன் வழங்கப்படும் என்ற கூட்டுறவுத் துறை அறிவிப்புக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: விவசாயிகள் தங்களது சாகுபடி நிலத்துக்கான சிட்டா மற்றும் மற்றும் அடங்கல் சான்றுகளை கொடுக்க வேண்டும். குத்தகை சாகுபடியாளர் என்றால், நில உரிமையாளரிடம் ரூ.100 பத்திரத்தில் ஒப்புதல் பெற்று, கிராம நிர்வாக அலுவலர் சான்றையும் இணைத்துக் கொடுக்க வேண்டும். கோயில் மற்றும் இதர நிறுவனங்களின் சாகுபடி நிலமாக இருந்தால், அதன் செயல் அலுவலரின் ஒப்புதல் சான்றுடன் வருவாய்த் துறை சான்றையும் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

இந்த சான்றுகளைக் கொடுத்தால் மட்டுமே கூட்டுறவு வங்கிகளின் மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் கொடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை மாநிலத் தலைமை, கடந்த மே 13-ம் தேதி கிளை நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் பெரும் பகுதி விவசாயிகள் கோயில், மடம், அறக்கட்டளை மற்றும் தனியாருக்கு சொந்தமான நிலங்களின் சாகுபடியாளர்களாகத்தான் உள்ளனர். இவர்களில் ஒரு பகுதியினர் குத்தகை பதிவு சட்ட உரிமை பெற்றவர்கள். கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட புயல், மழை, வெள்ளம், சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்களால் சாகுபடியாளர்கள் குத்தகை செலுத்த இயலவில்லை.

குத்தகையை தள்ளுபடி செய்யாமல், வருவாய் நீதிமன்றங்களில் சாகுபடியாளர்கள் மீது வழக்குகள் போட்டுள்ளதால், நிர்வாகங்கள் கடன் பெறுவதற்கான சான்றுகளைக் கொடுப்பதில்லை.

கடந்த சில ஆண்டுகளாக பயிர் சாகுபடி செய்யாத குத்தகை நில உரிமையாளர்களே, தங்களது பெயரில் கூட்டுறவுக் கடனை பெற்று வருகின்றனர். சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு இந்த கடன்கிடைப்பதில்லை. சாகுபடிச் சான்றுகொடுக்க வேண்டிய வருவாய்த் துறையோ, பயிரிட்ட பின்னர் தான்கள ஆய்வு செய்து, கடன் பெறுவதற்கான சான்று கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.இப்படியான நெருக்கடிகளில், நில உரிமையாளர்களின் ஒப்புதல் சான்று கொடுத்தால் மட்டுமே கூட்டுறவு கடன்கொடுப்பது என்பது சாத்தியமில்லை.

பயிர்க்கடன் ஒதுக்கீட்டை விவசாயிகளுக்குக்கு வழங்காமல், வேறு துறைகளுக்கு மடை மாற்றவே இந்த உத்தரவு உதவும். எனவே, இந்த நிபந்தனையை மாநிலகூட்டுறவுத் துறை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in