

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் பம்புசெட் மூலம் 20 ஆயிரம் ஏக்கரில்கோடை நெற்பயிர் நடவு செய்யப்பட்டிருந்தது. தற்போது பயிர்கள் அறுவடை செய்யும் நிலையில் இருந்தன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை முதல் இரவுவரை மாவட்டத்தில் பலஇடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால், வாழமரக்கோட்டை, வரவுக்கோட்டை, சடையார்கோவில், பொன்னாப்பூர் பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் கதிருடன் வயலிலேயே சாய்ந்துள்ளன.
இந்த வயல்களில் இயந்திரம் மூலம் நெல் அறுவடை செய்ய கூடுதல் நேரமாகும் என்பதாலும், வயலிலேயே நெல்மணிகள் உதிர்ந்து மகசூல் குறைய வாய்ப்பு உள்ளதாலும் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, "பூச்சித் தாக்குதல் போன்ற இயற்கை இடர்பாடுகள் இருக்காது என்பதால், பம்புசெட் மூலம் கோடையில் நெல் சாகுபடி செய்வது வழக்கம். கோடை நடவு செய்யப்பட்ட நெற்பயிர்கள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இன்னும் சில வாரங்களில் அறுவடை முடிய இருந்த நேரத்தில், நேற்று முன்தினம் வீசிய காற்றால் நெற்பயிர்கள் வயலிலேயே சாய்ந்துள்ளன. 2 ஆயிரம் ஏக்கரில் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கும். தொடர்ந்து மழை பெய்தால், சாய்ந்து வயலில் கீழே கிடக்கும் நெல்மணிகள் உதிர்ந்து முளைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், மகசூல் குறைந்து விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உள்ளது" என்றனர்.
இதுகுறித்து வேளாண் துறையினர் கூறுகையில், "தஞ்சாவூர் மாவட்டத்தில் பரவலாக நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை160 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. காற்று அதிகமாக வீசியதால்,நெற்பயிர்கள் வயலில் சாய்ந்துள்ளன. ஆனால், பெரும் பாதிப்புகள் ஏதும் ஏற்பட வாய்ப்பில்லை" என்றனர்.
சோள பயிர்களும் பாதிப்பு: இதேபோல, மருங்குளம், நாஞ்சிக்கோட்டை, குருங்குளம், திருக்கானூர்பட்டி, வல்லம் ஆகிய பகுதிகளில் சித்திரைப் பட்டத்தில் மானாவாரியாக சோளம் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. இவை தற்போது நன்றாக வளர்ந்து இன்னும் ஓரிரு வாரங்களில் கதிர் விடும் நிலையில் இருந்தன. ஆனால், நேற்று முன்தினம் சூறைக்காற்றுடன் மழை பெய்ததால், சோளப்பயிர்களின் தண்டுகள் முறிந்து சேதமடைந்து உள்ளன.