Published : 24 Apr 2018 01:43 PM
Last Updated : 24 Apr 2018 01:43 PM

சென்னையில் ஓடும் ரயிலில் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயற்சி: இளைஞரை மடக்கிப் பிடித்த காவலர்

 வேளச்சேரியிலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற பறக்கும் ரயிலில் இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இளைஞரை மடக்கிப் பிடித்து இளம்பெண்ணை மீட்டார் இளம் காவலர் ஒருவர்.

சென்னை வேளச்சேரியிலிருந்து நேற்றிரவு 11 மணியளவில் கடற்கரை நோக்கி பறக்கும் ரயில் சென்றுகொண்டிருந்தது. இதில் ஆண்கள் பெண்கள் பயணம் செய்யும் பொதுப் பெட்டியில் இளம்பெண் ஒருவர் ஏறி அமர்ந்து பயணம் செய்தார். ரயில் ஒவ்வொரு ஸ்டேஷனாக வந்த பொழுது பயணிகள் இறங்கிச் சென்றனர்.

ரயிலில் அமர்ந்து பேப்பர் படித்துக்கொண்டிருந்த இளம்பெண் சோர்வு மிகுதியால் தூங்கிவிட்டார். ரயில் சிந்தாதிரிப்பேட்டை ஸ்டேஷனுக்கு வந்தபோது அந்த பெட்டியிலிருந்த அனைவரும் இறங்கிச் சென்றுவிட்டனர். இளம்பெண்ணும், வேளச்சேரியைச் சேர்ந்த சத்யராஜ் (25) என்ற இளைஞரும் மட்டுமே இருந்தனர். இதனால் தைரியமடைந்த இளைஞர் சத்யராஜ் திடீரென இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய ஆரம்பித்தார்.

தூக்கத்திலிருந்து கண்விழித்த இளம்பெண் செய்வதறியாது திகைத்தார். அதிர்ச்சி அடைந்த அவர் சத்யராஜிடமிருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் சத்யராஜ் தனது தீய செயலில் முனைப்பாக இருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. வேறு வழியின்றி காப்பாற்றும்படி கூச்சலிட்டார்.

அவரது கூச்சல் ரயில் சத்தத்தையும் மீறி பக்கத்துப் பெட்டியில் பயணம் செய்த ரயில்வே போலீஸ் சிவாஜி எனபவருக்குக் கேட்டது. ஆனால் ரயில் ஓடிக்கொண்டிருந்ததால் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை. பூங்கா நகர் நிலையத்தில் ரயில் வந்து நின்றவுடன் காவலர் சிவாஜி வேகமாகச் சென்று பக்கத்துப் பெட்டிக்குள் புகுந்தார்.

அப்போது பெட்டிக்குள் இளம்பெண்ணை சத்யராஜ் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுகொண்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாக அந்த இளைஞரைப் பிடித்து இளம்பெண்ணை மீட்டார். சத்யராஜ் உடனடியாக ரயில்வே போலீஸில் ஒப்படைக்கப்பட்டார்.

பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதால் இளம்பெண் அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை, அவர் மயக்க நிலையில் காணப்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட அவர் மனநல சிகிச்சைக்காக அரசு மன நல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

பாலியல் குற்றவாளியை உடனடியாக செயல்பட்டு பிடித்து இளம்பெண்ணை மீட்ட ரயில்வே எஸ்.ஐ சுப்பையா, காவலர் சிவாஜி இருவருக்கும் ரயில்வே ஐஜி பொன் மாணிக்கவேல் பாராட்டி தலா ரூ.5000 வெகுமதி அளித்தார்.

ஓடும் ரயிலில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறித்து பேசிய ஐஜி பொன் மாணிக்கவேல், '' முதல் பாதுகாப்பே பெற்றோர்தான். போலீஸார் எல்லாம் பிறகுதான். இளம்பெண் ஒருவர் இரவு 11 மணிக்கு மேல் தன்னந்தனியாக பயணம் செய்துள்ளார். பெண்களுக்கான பெட்டி உள்ளது. ஆனால் அவர் ஆண்கள், பெண்கள் அனைவரும் பயணம் செய்யும் பொதுப்பெட்டியில் பயணம் செய்துள்ளார். நேரம் ஆக ஆக இளம்பெண் அசந்து தூங்கியதும், பெட்டியில் யாரும் இல்லாததையும் குற்றவாளி பயன்படுத்தியுள்ளார்'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x