

சென்னை: தமிகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கேரளாவிலும் மீன்பிடித் தடைக் காலம் தொடங்கியதால் சென்னைக்கு பெரிய மீன்களின் வரத்து குறைந்துள்ளது.
ஆண்டுதோறும் ஏப்.15-ம் தேதி முதல் ஜுன் 16-ம் தேதி வரை மீன்பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. சென்னையில் மீன்பிடித் தடைக்காலம் தொடங்கியதில் இருந்து வஞ்சிரம், வவ்வால் போன்ற பெரிய மீன்களின் வரத்து குறைந்தது.
அதே சமயம், கேரளாவில் இருந்து மீன்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில், கேரளாவில் மீன்பிடித் தடைக்காலம் நேற்று முன்தினம் (1-ம் தேதி) தொடங்கியது.
இதன் காரணமாக, சென்னையில் நேற்று பெரிய மீன்களின் வரத்து குறைந்தது. சாளை, நெத்திலி, சங்கரா, இறால் போன்ற சிறிய மீன்களே விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
இதனால், பெரிய மீன்களை வாங்க சென்ற மீன் பிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர். தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் வரும் ஜுன் 16-ம் தேதி முடிவடைந்த பிறகு தான் பெரிய மீன்களின் வரத்து இருக்கும் என மீனவர்கள் தெரிவித்தனர்.