

பொள்ளாச்சி: வால்பாறையில் காட்டுயானை தாக்கியதில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டம், மானாம்பள்ளி வனச்சரகத்துக்கு உட்பட்ட புதுக்காடு எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் சுரேஷ் இவரது மகன் முகேஷ், (18) தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார்.
நேற்று மாலை சுமார் 6 மணியளவில் புதுக்காடு எஸ்டேட்டில் இருந்து சோலையாறு அணை செல்லும் எஸ்டேட் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, புதுக்காடு எஸ்டேட் தேயிலைத் தோட்டப்பகுதியில் உள்ள சாலையில் இருந்த காட்டு யானை துரத்தி சென்று தாக்கியதில் காயம் அடைந்தார். இவரை உடனடியாக அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் மீட்டு முருகாளி எஸ்டேட் தோட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல்சிகிச்சைக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மருத்துவமனை செல்லும் வழியில் உயிரிழந்தார். வால்பாறை அரசு மருத்துவமனையில், மருத்துவர்கள் பரிசோதனை செய்து முகேஷ் உயிரிழந்ததை உறுதி செய்தனர்.
இது குறித்து வனத்துறையினர் கூறும்போது, "பொதுமக்கள் அச்சத்தைப் போக்கும் வகையில் மானாம்பள்ளி வனச்சரக களப்பணியாளர்கள் மற்றும் மனித வன உயிரின மோதல் தடுப்புக்குழுவினர் கூடுதலாக பணியமர்த்தப்பட்டு வன உயிரினங்களின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்த தகவல் அறிந்த ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி கோட்டம் துணை இயக்குநர் பார்கவ் தேஜா வால்பாறை அரசு மருத்துவமனையில் நேரில் சென்று முகேஷ் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்" என்று தெரிவித்தனர்.