Published : 10 Apr 2018 07:41 AM
Last Updated : 10 Apr 2018 07:41 AM

தினகரன் ஆதரவு எம்எல்ஏவின் கட்சி பதவி பறிப்பு

டி.டி.வி.தினகரன் ஆதரவாளராக செயல்பட்டு வரும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஏ.பிரபுவின் கட்சிப் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏவான ஏ.பிரபு, சமீபத்தில் டி.டி.வி.தினகரன் அணியில் இணைந்தார். இந்நிலையில் தற்போது அவரை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘‘விழுப்புரம் தெற்கு மாவட்டம், தியாகதுருகம் ஒன்றிய இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறையின் செயலாளர் பொறுப்பில் உள்ள கள்ளக்குறிச்சி எம்எல்ஏவான ஏ.பிரபு, இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்.

அதே போல், கட்சிக் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட, விழுப்பரம் தெற்கு மாவட்ட மாணவர் அணி செயலாளர் க.சீனிவாசன், சின்னசேலம் ஒன்றிய முன்னாள் செயலாளர் க.ராஜேந்திரன், திருக்கோவிலூர் பேரூராட்சி முன்னாள் செயலாளர் எஸ்.இளவரசன் ஆகியோர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகின்றனர்,

பெரம்பலூர் மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் கு.லட்சுமி அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, பெரம்பலூர் மாவட்ட துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம் ஆலந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி பொதுக்குழு உறுப்பினராக வி.பரணி பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்’’ என்று கூறப்பட்டுள்ளது.

பிரபு நீக்கப்பட்டதன் காரணம்

‘கள்ளக்குறிச்சியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கப்படவில்லை, தொகுதி வளர்ச்சிப் பணிகளில் அரசு கவனம் செலுத்தவில்லை. அதனால் நான் டிடிவி தினகரனை ஆதரிக்கிறேன்’ என்று அண்மையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு தெரிவித்திருந்தார்.

அவர், மேற்கண்ட காரணங்களைக் கூறி தினகரன் அணிக்கு மாறினாலும், அவருக்கும் விழுப்புரம் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவிற்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவே, பிரபு தினகரன் அணிக்கு மாறியதாக அதிமுக வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதிருப்தியால் அணி மாறிய பிரபு, தினகரன் தொடங்கிய அம்மா முன்னேற்ற மக்கள் கழக தொடக்க விழாவிலும் கலந்து கொண்டார்.

இதையடுத்து கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபுவை, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளராக நியமித்து, தினகரன் அண்மையில் அறிவிப்பு வெளியிட்டார். மேலும், கள்ளக்குறிச்சிக்குச் சென்று, அவரை வாழ்த்தி சால்வையும் அணிவித்தார். அப்போது தினகரன் முன்னிலையிலேயே அதிமுக அணியினருக்கும், தினகரன் அணியினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரபு பதவி யாருக்கு?

சமீபமாக, கள்ளக்குறிச்சி பகுதியில் கூட்டுறவு சங்கத் தேர்தலிலும் அதிமுகவினரும், பிரபு தலைமையில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினரும் மோதிக் கொள்ளும் போக்கு தொடர்கிறது. இதனால், பிரபு மீது அதிமுக தலைமை மத்தியில் கடும் கோபத்தில் இருந்து வந்தது.இந்த நிலையில் அவரை கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர்.

பிரபு நீக்கப்பட்ட நிலையில், அவர் வகித்து வந்த பதவியை உளுந்தூர்பேட்டை எம்எல்ஏ குமரகுருவின் ஆதரவாளர்களுக்கு வழங்குவார்களா அல்லது முன்னாள் அமைச்சரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான மோகனின் ஆதரவாளர்களுக்கு வழங்குவார்களா என்ற கேள்வி விழுப்புரம் மாவட்ட அதிமுகவினர் மத்தியில் எழுந்துள்ளது. பிரபு, அவரது ஆதரவாளர்கள் தினகரன் அணிக்கு மாறியுள்ள நிலையில், அவரது தந்தை ஐயப்பன் தியாகதுருகம் ஒன்றிய செயலாளராக நீடிப்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x