Published : 15 Apr 2018 09:32 AM
Last Updated : 15 Apr 2018 09:32 AM

திராவிடம், பொதுவுடைமை, காந்தியத்தை உள்ளடக்கியவர் சா.கணேசன்

ரசியலில் எளிமையாக களப்பணிகளை மேற்கொண்ட சா.கணேசனுடன் எனக்கு அறிமுகம் 1979-ல்தான். காங்கிரஸில் இருந்து பிரிந்து நெடுமாறன் தொடங்கிய தமிழ்நாடு காங்கிரஸ் (காமராஜ்) இயக்கத்தில் நான் பொதுச்செயலாளராக இருந்தேன்.

அப்போது தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் ஈழப் பிரச்சினை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தலைமறைவாக இருந்து, தனது பணிகளை நடத்திய காலம் அது. 1982-ல் பாண்டிபஜார் நிகழ்வுக்குப் பிறகுதான் விடுதலைப்புலிகள் இயக்கம் தமிழகத்தின் கவனத்துக்கு வந்தது. அப்போது, சா.கணேசன், ஈழப் பிரச்சினை குறித்து அடிக்கடி தொலைபேசியில் கேட்பது வழக்கம். இப்படித்தான் எங்களது தொடர்பு நெருக்கமானது.

சா.கணேசன் அந்தக் காலத்தில் பக்கிங்ஹாம் கர்னாட்டிக் ஆலையின் (பி அண்ட் சி ஆலை) பாரிமுனை அங்காடியில் விற்பனையாளராக பணியாற்றினார். அப்போதுதான் தி.நகர் வட்டாரத்தில் இருந்து 1959, 1964, 1968 ஆகிய ஆண்டுகளில் 3 முறை மாநகராட்சி மன்ற உறுப்பினராகத் தேர்வானார். அதன்பின் 1970-ல் சென்னை மேயரானார். வங்கதேச உதயம், காவிரி பிரச்சினை, வீராணம் ஏரி நீர் குறித்தும் முக்கிய தீர்மானங்களை மாநகராட்சி மன்றத்தில் நிறைவேற்றினார். மும்பையில் நடந்த அகில இந்திய மேயர்கள் மாநாட்டில், எல்லா மாநகராட்சியிலும் ஒரே மாதிரியான வரிவிதிக்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் வழங்கினார்.

பி அண்ட் சி ஆலை அங்காடியின் விற்பனையாளராக இருக்கும்போதே பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோருக்கு நன்கு அறிமுகமாகி இருந்தார். இவரது அடையாளம் சிவப்புத் துண்டும் வெள்ளை வேட்டியும்தான். ராயபுரம் அறிவகத்தில் திமுக தலைமை அலுவலகம் செயல்பட்ட காலத்தில் தொடங்கி, தேனாம்பேட்டை அன்பகம், தற்போதைய அண்ணா அறிவாலயம் வரை சா.கணேசனின் காலடிச் சுவடுகள் அழுத்தமாக பதிந்துள்ளன. திமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் எம்பி செ.குப்புசாமி, ஆயிரம் விளக்கு உசேன், சா.கணேசன் போன்றவர்கள் தலைவர் கருணாநிதியின் அறிவுறுத்தல்களை பம்பரமாக சுழன்று பணியாற்றி செயல்படுத்தி வந்தனர். அவர்களது மேலான பணிகளை அப்போது நடந்த டெசோ பேரணிகள், மதுரை மாநாடு போன்ற நிகழ்வுகளில் நேரில் பார்த்திருக்கிறேன்.

தமிழ் உணர்வு, தமிழ் மொழிப்பற்று, பொதுவுடமைக் கொள்கைகளை சா.கணேசன் நேசித்தார். காந்தியைப் போன்று எளிமையாக வாழ்ந்து காட்டியவர். இன்றைக்கு கவுன்சிலராக இருப்பவர்கள் குறைந்தபட்சம் ஒரு காராவது வைத்திருப்பர். ஆனால், சா.கணேசன் அப்படியல்ல. நகரப் பேருந்தில்தான் பயணிப்பார். பஸ் நிறுத்தத்தில் கூட்டத்தோடு கூட்டமாக வெள்ளை உடை, சிவப்பு துண்டுடன் அவர் நிற்பதை பலர் பார்த்ததுண்டு. பயணத்தின்போது, பேருந்தில் யாராவது எழுந்து இடம் கொடுத்து அமருங்கள் என்றால்கூட, அமரமாட்டார். நின்றுகொண்டே பயணிப்பது அவருடைய வாடிக்கை.

திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும், சா.கணேசனும் இந்தோ - சோவியத் நட்புறவுக் கழகம் (இஸ்கஸ்) சார்பில் சோவியத் யூனியனுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

தலைவர் கருணாநிதி தலைமையின் மீது எவ்வளவு பற்று வைத்தாரோ, அதே அளவு இன்றைக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மீதும் சா.க., பற்றும் பாசமும் வைத்திருந்தார். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகள், போராட்டங்கள், நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்வார்.

ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கு.க.செல்வம் கோடம்பாக்கத்தில் நடத்திவரும் கழக நூலகத்தை பொறுப்பெடுத்து கவனித்து வந்தார். தன் முதல் மகனுக்கு பட்டுக்கோட்டை அழகிரி பெயரையும், இரண்டாவது மகனுக்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் வைத்தார்.

எனக்கு இவர் மீதான மரியாதை மேலும் அதிகரிக்க, மூன்று சம்பவங்கள் காரணமாக இருந்தன. பிரபாகரன் மீதான பாண்டிபஜார் சம்பவ வழக்கு, 1983-ல் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிட்டி சிவில் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நிபந்தனை ஜாமீனில் இருந்த பிரபாகரன், மதுரையில் இருந்து சென்னைக்கு வந்து வழக்கில் ஆஜராவார். அந்த வழக்கை நான்தான் நடத்தினேன் (வழக்கு எண்: எஸ்.சி., எண் 8/1983). அப்போது நானும் தி.சு.கிள்ளிவளவனும், எம்.கே.டி.சுப்பிரமணியமும் நெடுமாறன் கட்சியின் மாநில பொதுச்செயலாளராக இருந்தோம். கிள்ளிவளவனுடனோ, எம்.கே.டி.யுடனோ சா.கணேசன் நீதிமன்றத்துக்கு வருவார்.

இந்த வழக்கின்போது நானும், நெடுமாறனும் தங்கியிருந்த வீட்டில் ரெய்டு நடத்திய போலீஸார், பிரபாகரன் பயன்படுத்திய தமிழ் தட்டச்சு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர். அந்த இயந்திரத்தை திருப்பித் தரவேண்டும் என்று மனு செய்திருந்தேன். அப்போது, ‘நான் வேணும்னா புது தட்டச்சு இயந்திரத்தை வாங்கித் தரவா?’ என்று கேட்டு நெகிழ வைத்தார் சா.கணேசன். அதற்கு நான், ‘அந்த இயந்திரத்தைத்தான் வாங்கணும் என்று பிரபாகரன் விரும்புகிறார்’ என்று கூறியது நினைவிருக்கிறது.

1989 தேர்தலில் தி.நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் சா.கணேசன் போட்டியிட்டபோது, நான் கோவில்பட்டி தொகுதியில் நின்றேன். வேட்புமனு தாக்கலின்போது, ‘என்ன ராதா, உங்களுக்கு இங்கும், சென்னையிலும் வாக்கு இருக்கிறதா?’ என்று வைகோ கேட்டார். அப்போதுதான் சென்னையிலும் எனக்கு வாக்கு இருப்பது தெரிந்தது. உடனடியாக சா.கணேசனிடம் இதுபற்றி கூறினேன். அவர் தனது தேர்தல் பணிகளைகூட விட்டுவிட்டு, உடனடியாக எனக்கு உதவி செய்தார்.

என்னுடைய நூலகத்தில் 15 ஆயிரம் நூல்கள் உள்ளன. எப்போதாவது வந்து புத்தகத்தை கேட்டு வாங்குவார். படித்துவிட்டு, சரியாக திருப்பித் தந்துவிடுவோர். தி.நகரில் வசித்தபோது, அங்குள்ள நடேசன் பூங்காவில் தினமும் காலையில் நடைபயிற்சி மேற்கொள்வார். உடல்நிலையை சரியாக பேணுவார்.

திராவிடம், பொதுவுடைமை, காந்தியம் என அனைத்தையும் தனக்குள் கொண்ட சா.கணேசன், எப்போதும் எளிமையாக இருப்பார். எல்லோரிடமும் இனிமையாக பழகுவார். என் மீது மிகவும் பற்றுதலாக இருப்பார். அவரைப் பற்றிய சில தரவுகளை மட்டும் இந்த நேரத்தில் நினைவாக இங்கு பதிவு செய்துள்ளேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x