கோயில் சிலை கடத்தல் வழக்குகள்: வெள்ளை அறிக்கை வெளியிட இந்து முன்னணி வலியுறுத்தல்

கோயில் சிலை கடத்தல் வழக்குகள்: வெள்ளை அறிக்கை வெளியிட இந்து முன்னணி வலியுறுத்தல்
Updated on
1 min read

சென்னை: கோயில் சிலை கடத்தல் வழக்குகளில் எடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.

இது குறித்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கடந்த ஆட்சியில் சென்னை உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி சிலை கடத்தல் பிரிவு டிஜிபி பொன்.மாணிக்கவேலின் நடவடிக்கையால், கடத்தப்பட்ட பல கோயில்களின் சிலைகள் மீட்கப்பட்டன.

அந்தக் குற்றச் செயலில் ஈடுபட்ட அதிகாரிகளும் கைது செய்யப்பட்டனர். இன்னும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையிலும் உள்ளன. தற்போது, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், குற்றம்சாட்டப்பட்ட இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீதான நடவடிக்கை கைவிடப்பட்டது.

வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிலைகளை மீட்க இந்து சமய அறநிலையத்துறை மற்றும் சிலை தடுப்புப் பிரிவு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? இதுவரை காணாமல் போன கோயில் சிலைகள் எவ்வளவு, அதற்காக சிலை தடுப்புப் பிரிவு போட்டுள்ள வழக்குகள் எத்தனை? காணாமல் போன பல ஆயிரம் கோடி மதிப்பிலான மரகதலிங்கம் போன்றவை குறித்து எடுத்த நடவடிக்கை என்ன?

கோயில் சிலை களவு போவதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீதான நடவடிக்கை என்ன? சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன மயில் சிலை தேடுதல் வேட்டை என்னவானது? - இவற்றுக்கான பதில்கள் குறித்தும் இதுவரை சிலை திருட்டு, கடத்தல் வழக்குகளில் எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்தும் ஆளும் திமுக அரசு முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in