Last Updated : 13 Apr, 2018 09:18 AM

 

Published : 13 Apr 2018 09:18 AM
Last Updated : 13 Apr 2018 09:18 AM

வறட்சி, தீவன பற்றாக்குறையால் தினசரி பால் உற்பத்தியில் 5 லட்சம் லிட்டர் குறைவு; நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரிப்பு

வறட்சி மற்றும் தீவனப் பற்றாக் குறையால் தமிழகத்தில் தினசரி பால் உற்பத்தியில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது. சத்துள்ள நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 7 லட்சத்து 50 ஆயிரம் காங்கேயம் ரக நாட்டு கறவை மாடுகளும், ஜெர்ஸி போன்ற கலப்பின கறவை மாடுகளும் உள்ளன. இதில், நாட்டு கறவை மாடுகளின் எண்ணிக்கை 75 ஆயிரம் மட்டுமே. கடந்த சில ஆண்டுகளாக போதிய மழைப்பொழிவு இல்லாததால் தமிழ்நாடு வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளது.

இதனால் வனப் பகுதிகளிலும், வயல்வெளியிலும் புற்கள் கருகிவிட்டதால் மாடுகளுக்கு தீவனம் கிடைக்கவில்லை.

காவிரியில் தண்ணீர் திறக்காதததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 10 லட்சம் ஏக்கரில் நெற் பயிர்கள் கருகி வருகின்றன. இதனால் வைக்கோல் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கறவை மாடுகள் கலப்பு தீவனத்தை மட்டுமே நம்பியிருக்கும் நிலை உருவாகியுள்ளது.

ஆவின் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்கள் மூலம் பால் கொள்முதல் செய்கிறது. இந்த ஒன்றியங்களுக்கு 8 ஆயிரத்து 300 பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் விற்கப்படுகிறது. வறட்சி மற்றும் தீவனத் தட்டுப் பாடு காரணமாக தமிழகத்தில் தினசரி மொத்த பால் உற்பத்தி யில் சுமார் 5 லட்சம் லிட்டர் குறைந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஏ.செங்கோட்டு வேல் கூறியதாவது:

28 லட்சம் லிட்டர்

தமிழ்நாட்டில் தினசரி பால் உற்பத்தி 33 லட்சம் லிட்டராக இருந்தது. வறட்சி மற்றும் தீவன தட்டுப்பாட்டால் இது 28 லட்சம் லிட்டராக குறைந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 17 மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றியங்களில் சேலம் ஒன்றியத்தில் இருந்துதான் அதிகபட்சமாக தினமும் 5 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் பால் கிடைக்கிறது. புற்களும், வைக்கோலும் கிடைக்காத நிலையில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனத்தையே நம்பியுள்ளோம். அதுவும் சேலம் ஒன்றியம் போல லாபகரமாக இயங்கும் ஒன்றியங்கள் மட்டுமே மானியத்துடன் கலப்பு தீவனத்தை விற்கின்றன.

50% மானியம் வேண்டும்

ஒரு கிலோ கலப்பு தீவனத்தின் விலை 16 ரூபாய் 10 பைசா. சேலம் ஒன்றியத்தில் ஒரு கிலோவுக்கு 2 ரூபாய் மானியம் தரப்படுகிறது. தமிழகத்தில் பால் உற்பத்தியை அதிகரிக்க கலப்பு தீவனத்தை 50 சதவீத மானியத்தில் வழங்க வேண்டும் என்று அரசை கோரி வருகிறோம். கடந்த மாதம் ஒரு கிலோ வைக்கோல் ரூ.18-க்கு விற்றது. தட்டுப்பாடு காரணமாக தற்போது 2 ரூபாய் அதிகரித்து ரூ.20-க்கு விற்கப்படுகிறது. திருவண்ணாமலை, கடலூர், செங்கல்பட்டு, தஞ்சை ஆகிய மாவட்டங்களில் இருந்து ஈரோடு, சேலம், கோவை போன்ற இடங்களுக்கு வைக்கோல் எடுத்து வரப்படுகிறது. பால் உற்பத்தி குறைவு காரணமாக ஈரோடு, சேலம், மதுரை, தர்மபுரி ஆகிய 4 பால் பவுடர் தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பால் பவுடர் பாலில் கலக்கப்படுவதாகக் கூறப் படுகிறது.

ஒரு லிட்டர் ரூ.120

நாட்டு கறவை மாட்டுப் பால், பிறந்த குழந்தைகளுக்கு மிகவும் சிறந்தது என்பதால் அதன் விலை அதிகரித்துள்ளது. ஈரோட்டில் காங்கேயம் ரக கறவை மாட்டுப் பால் ஒரு லிட்டர் ரூ.120-க்கு விற்கப்படுகிறது. இந்த பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைக்கும், பிற மாட்டுப் பால் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தையின் வளர்ச்சிக்கும் பெரும் வித்தியாசம் இருப்பதால் நாட்டு கறவை மாட்டுப் பாலுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

இவ்வாறு செங்கோட்டுவேல் கூறினார்.

பால் உற்பத்தி தொடர்பாக ஆவின் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்தாண்டின் இறுதி யில் நாளொன்றுக்கு 33 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டது. இப்போது தினமும் 29 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இதில், சென்னையில் 12 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும், மற்ற மாவட்டங்களில் 10 லட்சத்து 45 ஆயிரம் லிட்டரும் விற்கப்படுகிறது. மீதமுள்ள பால், பால்கோவா போன்ற பால் உபபொருட்கள் செய்யப் பயன்படுத்தப்படுகிறது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x