

சென்னை: தலைமைச் செயலகத்தில் முதல்வர் தனிப்பிரிவு உட்பட பல்வேறு துறைகளில் உள்ள காலி பணியிடங்களால் தற்போதைய அலுவர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனவே தேவையான அலுவலர்களை நியமிக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவில் அன்றாடம் பொதுமக்கள் அளிக்கும் புகார்கள், ஆன்லைனில் பெறப்படும் புகார்கள்,பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி அவற்றின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, அது குறித்த தகவல் புகார்தாரருக்கும் அனுப்பப்படுகிறது.
இதற்காக முதல்வரின் முகவரி என்ற துறை தொடங்கப்பட்டு, முதல்வருக்கு சமர்ப்பிக்கப்படும் மனு சார்ந்த பல்வேறு பணிகள் இத்துறையில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்துறையில் ஏற்பட்டுள்ள அலுவலர் பற்றாக்குறையால் இருக்கும் அலுவலர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
69 பணியிடங்களுக்கு 41 பேர்: இதுகுறித்து தலைமைச் செயலக அலுவலர்கள் கூறியதாவது: முதல்வர் தனிப்பிரிவில் 69 பணியிடங்களில் தற்போது 41 பேர்மட்டுமே பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, 21 உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களில் 7 இடங்களும், 6 உதவியாளர் பணியிடங்களில் 5 இடங்களும், தலா ஒரு தனி உதவியாளர், தனி எழுத்தர் பணியிடங்களும், 8 தட்டச்சர் இடங்களில் 5 இடங்களும் தற்போது காலியாகஉள்ளன. இதனால், இருக்கும் மற்ற அலுவலர்களுக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
40 சதவீத பணியிடம் காலி: இது போன்ற நிலை இந்த ஒருஅலுவலகத்தில் மட்டுமல்ல, பல்வேறு துறைகளிலும் பணியாளர் பற்றாக்குறை உள்ளது. தலைமைச்செயலகத்தில் மொத்தமாக 40 சதவீதம் பணியிடங்கள் காலியாக உள்ளன. தலைமைச்செயலகத்தில் இந்த மாதத்தில் மட்டும் பல்வேறு துறைகளில் கூடுதல் செயலர், கூடுதல் இயக்குநர், இணை செயலர், சார்பு செயலர், தட்டச்சர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் 35 பேர் ஓய்வு பெற்றுள்ளனர்.
இவ்வாறாக மாதந்தோறும் காலிப்பணியிடங்கள் உருவாகி வருகின்றன. இதற்கு பணியிடங்கள் நிரப்பப்படாததே தற்போதைய பிரச்சினைக்கு காரணமாகும். இதன் தாக்கம் முதல்வர் தனிப்பிரிவிலும் உள்ளது. தமிழக அரசு இதில் கவனம் செலுத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து விரைவாக அலுவலர்களை நியமிக்க வேண்டும்.
அதிக தட்டச்சர் தேவை: குறிப்பாக தட்டச்சர் நிலையில், சில நேரங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட துறைகளின் பணிகளை ஒருவரே பார்க்க வேண்டிய நிலை இருக்கிறது. இதற்காக தட்டச்சர்களை அதிகளவில் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.