Published : 01 Jun 2024 07:00 AM
Last Updated : 01 Jun 2024 07:00 AM
சென்னை: சென்னையில் குழந்தைகளை தெரு நாய் கடிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில் சாலையோர உணவக கழிவுகளை உண்டு தெருநாய்கள் பெருகுவதை கட்டுப்படுத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை மாநகரப் பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை பெரும் சவாலாக இருந்துவருகின்றன. நாள்தோறும் தெருநாய்கள் கடித்ததாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. நேற்றும் அம்பத்தூர் பகுதியில் ஒரு சிறுமியை தெரு நாய்கள் கடித்தன.
மாநகராட்சி நிர்வாகமும் மண்டலத்துக்கு ஒரு வாகனம் வீதம் 15 வாகனங்கள் மூலம்தெரு நாய்களை பிடித்து கருத்தடை செய்து, அதே இடத்தில் விட்டு வருகிறது. தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள், எங்கள் பிரச்சினைக்கு இது தீர்வு இல்லை என குற்றம்சாட்டி வருகின்றனர்.
வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களாலும் பொதுமக்களுக்கு தொடர்ந்து இடையூறு ஏற்பட்டு வருகிறது. வீடுகளில் செல்லப் பிராணிகளை வளர்ப்போர், அவற்றுக்கு சென்னை மாநகராட்சியிடம் உரிமம் பெறுவதுகட்டாயம். இதன் மூலம் நாய்கள் உள்ளிட்டசெல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி போடுவது உறுதி செய்யப்படுகிறது.
குடற்புழு நீக்கமும் செய்யப்பட்டு, அவற்றின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படுகிறது. மாநகராட்சியிடம் உரிமம் பெறாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையில் சென்னை மாநகர பகுதியில் ஆயிரக்கணக்கில் இயங்கிவரும் சாலையோர உணவகங்களில் இருந்து உருவாகும் உணவுக் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாமல், சாலையோரங்களில் கொட்டுவது, அதை நாய்கள் உண்பதன்காரணமாக, சாலையோர உணவகங்களின் உணவுக் கழிவுகள் நாய்கள் இனப்பெருக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
கடைகளுக்கு அபராதம்: இது தொடர்பாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ஒவ்வொரு கடையும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரு வகையான குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும். அதில் சேகரமாகும் குப்பைகளை முறையாக மாநகராட்சி பணியாளரிடம் வழங்கி அப்புறப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அவ்வாறு வைக்காத கடைகளுக்கு அபராதம் விதித்து, சாலையோர உணவக, உணவுக் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து சாலையோர உணவகம் நடத்துவோருக்கும் நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT