Last Updated : 12 Apr, 2018 09:29 AM

 

Published : 12 Apr 2018 09:29 AM
Last Updated : 12 Apr 2018 09:29 AM

சென்னையை அடுத்த திருவிடந்தையில் ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கியது: பிரமிக்க வைத்த முப்படை வீரர்களின் பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சிகள்

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தையில் பாதுகாப்புத் துறையின் ‘டெபெக்ஸ்போ-2018’ என்ற ராணுவ தளவாடக் கண்காட்சி நேற்று தொடங்கியது.

சர்வதேச அளவில் இந்திய ராணுவத்தின் வலிமையை பறைசாற்றும் வகையிலும் உள்நாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ராணுவ தளவாட உற்பத்தியை அதிகரிப்பதுடன், சர்வதேச அளவில் அதை தெரிவிக்கும் வகையிலும் இக்கண்காட்சி நடத்தப்படுகிறது.

இக்கண்காட்சியில் 701 பாதுகாப்புத் துறை தளவாட உற்பத்தி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. இதில் பெல், பிஇஎம்எல் உள்ளிட்ட முக்கிய இந்திய நிறுவனங்களும், அமெரிக்காவின் போயிங், பிரான்சின் ரபேல், ஏர்பஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களும் அடங்கும். 539 இந்திய நிறுவனங்களும், அமெரிக்கா உள்ளிட்ட 162 வெளிநாட்டுநிறுவனங்களும் அரங்குகள் அமைத்து, தங்களின் தளவாடங்களை காட்சிக்கு வைத்துள்ளன. கண்காட்சி அரங்கில் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை முன்னிட்டு நடந்த முப்படைகளின் சாகச நிகழ்ச்சிகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் சுரேஷ் பாம்ரே, முப்படையின் தளபதிகள், ராணுவ உயர் அதிகாரிகள், தமிழக அமைச்சர்கள் பெஞ்சமின், சம்பத் ஆகியோர் பார்வையிட்டனர். விமானப்படை வீரர்களின் சாகச நிகழ்ச்சிகள் அனைவரையும் பிரமிக்க வைத்தன.

தோனி பார்வையிட்டார்

ஏப்.14-ம் தேதி வரை நடக்கும் இக்கண்காட்சியில் கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து, இத்தாலி, கொரியா உள்ளிட்ட 47 நாடுகளின் அரசு பிரதிநிதிகள், பாதுகாப்புத் துறை அதிகாரிகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ராணுவக் கண்காட்சியை நேற்று பார்வையிட்டார்.

முதல் நாளான நேற்று நடந்த கருத்தரங்கில் வெளிநாட்டு பிரதிநிதிகள் பலர், இந்தியாவில் ராணுவ தளவாட உற்பத்தியில் முதலீடு செய்வது குறித்து கலந்துரையாடினர்.

கருத்தரங்கில் பேசிய ஏர்பஸ் நிறுவனத் தலைவர், பியரி டி பாஷெப், “உற்பத்தியை பொறுத்தவரை அனைத்து பணிகளையும் தனியார் நிறுவனங்களே செய்துவிட முடியும் என்று நினைப்பதில் சாத்தியம் இல்லை. அனைத்துப் பணிகளிலும், நன்மை தீமைகள் உள்ளன. அவை நடைமுறைக்கு ஒத்துவராது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்” என்றார்.

கேபிஎம்ஜி ஆலோசனை நிறுவன நிர்வாகி ஆம்பர் துபே பேசும்போது, “உற்பத்தியைப் பொறுத்தவரை எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று அரசு தரப்பில் கூறுவதை வரவேற்கிறோம். ஆனால், அரசை நெருங்கிவரும் போது அதிக முட்டுக்கட்டைகள் போடப்படுகிறது. குறிப்பாக, ஒப்பந்தங்கள் போடுவதில் காலதாமதம், காலக்கெடுவுக்குள் நிதி ஒதுக்காதது குறிப்பிடத்தக்கது ” என்றார்.

புதிய மைல் கல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர், பசிபிக் மண்டலத்தின் அமெரிக்க ராணுவ துணை கமாண்டிங் மேஜர் ஜெனரல் பிரையன் சந்திமெர் ஆகியோர் தலைமையில் அந்நாட்டின் குழுவினர் கண்காட்சியில் பங்கேற்றனர்.

செய்தியாளர்களிடம் அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டர் கூறும்போது, ‘‘பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் பெரும் கூட்டாளியாக அமெரிக்கா தன்னை அடையாளப்படுத்தி இருப்பது, இரு நாட்டு ஒத்துழைப்பில் ஒரு புதிய மைல் கல்லாகும். பாதுகாப்புத் துறையில் இத்தகைய கூட்டாண்மை ஒத்துழைப்பையும், இந்திய - பசிபிக் மண்டலத்தில் அமைதி, பாதுகாப்பு, வளத்தை அடிப்படையாகக் கொண்டு பரந்த செயல்நோக்கு உறவையும் அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியப் பிரதமர் மோடி ஆகிய இருவரும் முன்னெடுத்து செல்கின்றனர்’’ என்றார்.

ராணுவக் கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று முறைப்படி தொடங்கிவைத்து பார்வையிடுகிறார்.

வரும் 14-ம் தேதி பொதுமக்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x