Published : 04 Apr 2018 11:43 AM
Last Updated : 04 Apr 2018 11:43 AM

நியூட்ரினோ திட்ட விவகாரம்: 8 கோடி ஆண்டுகளாக நீர் கொடுத்த மலையை அழிப்பதா?-கவிஞர் வைரமுத்து கேள்வி

8 கோடி ஆண்டுகளாக நீர் கொடுத்த மேற்கு தொடர்ச்சி மலையை அழிப்பதா? என்று கவிஞர் வைரமுத்து கேள்வி எழுப்பினார்.

நியூட்ரினோ எதிர்ப்பு விளக்கப் பொதுக்கூட்டம் தேனியில் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலர் வைகோ பேசியதாவது:

நியூட்ரினோ திட்டத்துக்காக அம்பரப்பர் மலையில் இருந்து 11,20,000 டன் கற்களை வெட்டி எடுக்க உள்ளனர். இந்த மலையில் தான் அணுக்கழிவுகளை கொட்ட உள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமையாது என தெரிந்தும் தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்த ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். அரசு நியூட்ரினோ திட்டத்திலும் துரோகம் இழைக்கப் பார்க்கிறது. இதை வரலாறு மன்னிக்காது.

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் முல்லை பெரியாறு, இடுக்கி அணைகள் உடையும். இங்கிருந்தே உலகில் எந்த இடத்தில் உள்ள அணு ஆயுதங்களையும் செயல் இழக்கச் செய்ய முடியும்.

நியூட்ரினோ திட்டத்தை தடுத்து நிறுத்துவது எளிமையான காரியம் அல்ல. மிகப்பெரிய போராட்டம் நடத்த வேண்டும் என்றார்.

கவிஞர் வைரமுத்து பேசியதாவது:

நியூட்ரினோ என்பது ஒரு அடிப்படை துகள். அடிப்படை துகளை கண்டறிந்தால் பிரபஞ்ச துகளை கண்டுபிடிக்க முடியும் என்ற நம்பிக்கை. நாங்கள் விஞ்ஞானத்துக்கு எதிரிகள் அல்ல. மக்களுக்கு, மண்ணுக்கு எதிரான விஞ்ஞானத்துக்கு நாங்கள் விரோதிகள்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பெருமை தெரிந்தால் அதனை தொடுவீர்களா? மேற்கு தொடர்ச்சி மலையின் புவியியல் வயது 8 கோடி ஆண்டுகள். 8 கோடி ஆண்டுகளாக நீர் கொடுத்த தாய். வானத்தில் இருந்து மழையை கறந்து கொடுத்தது.

மேற்கு தொடர்ச்சி மலை 60 சதவீதம் மண்ணை நனைக்கிறது. ஏராளமான பறவைகள், தாவரங்கள், பாம்புகள் இங்கு உள்ளன. ரூ.1500 கோடி ஒதுக்கும் மத்திய அரசு மக்கள் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவில்லை. உணவு, குடிநீர், வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x