புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் உள்ள கோயில்களில் அமித் ஷா தரிசனம்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் பிரசித்தி பெற்ற பெருமாள், சிவன், பைரவர் கோயில்களில் மத்திய உள்துறை அமைச்சர்அமித் ஷா நேற்று குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் கோட்டையில் ராஜராஜேஸ்வரி உடனுறை சத்தியகிரீஸ்வரர், வேணுவனேஸ்வரி உடனுறை உமா மகேஸ்வரர், சத்தியமூர்த்தி பெருமாள் மற்றும் பைரவர் ஆகிய குடைவரைக் கோயில்கள் உள்ளன.
இந்தக் கோயில்களில் தரிசனம் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வாராணசியில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை திருச்சி வந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் சிவகங்கை மாவட்டம் கானாடுகாத்தான் சென்றார். பின்னர், அங்கிருந்து கார் மூலமாக திருமயம் வந்தார். அவருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் வந்தனர்.
அங்கு பெருமாள் கோயிலில் குடும்பத்தினருடன் அமித் ஷா தரிசனம் செய்தார். அப்போது சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பள்ளிகொண்ட நிலையில் உள்ளபெருமாளின் சிறப்புகள் குறித்து, அமித் ஷாவிடம் கோயில் பட்டர்கள்விளக்கினர். தொடர்ந்து, சத்தியகிரீஸ்வரர், உமா மகேஸ்வரர் கோயில்களிலும் சுவாமி தரிசனம் செய்தார்.
சிதறு தேங்காய் உடைத்து.. அதன்பிறகு, தேய்பிறை அஷ்டமியையொட்டி, கோட்டை பைரவர் கோயிலில் தரிசனம் செய்து, சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டார். பின்னர் அவர் அங்கிருந்து காரில் மீண்டும் கானாடுகாத்தான் சென்று, ஹெலிகாப்டரில் திருச்சிக்கு சென்றார். அங்கிருந்து விமானம் மூலம் திருப்பதி புறப்பட்டார்.
அமித் ஷா வருகையையொட்டிகோயில் பிரகாரம் முழுவதும் ரோஜா, தாமரை மலர்களால் அலங்கரிக்கப்பட்டும், சிவப்பு கம்பளம் விரிக்கப்பட்டும் இருந்தது. பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
