Published : 24 Apr 2018 08:33 AM
Last Updated : 24 Apr 2018 08:33 AM

நிர்மலாதேவிக்கு 5 நாள் காவல் நாளை முடிவடைகிறது: மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி திட்டம்- அதிகாரி சந்தானத்திடம் மேலும் 6 மாணவிகள் புகார்?

அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலாதேவியின் 5 நாள் போலீஸ் காவல் நாளையுடன் (ஏப். 25) முடிவடைகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தி மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி. இவர் கடந்த 16-ம் தேதி மாணவிகளை பாலியலில் ஈடுபட செல்போன் மூலம் வற்புறுத்தியதாக அருப்புக்கோட்டை நகர் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். இவர் விருதுநகர் நீதிமன்றத்தில் 17-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து இவ்வழக்கு விசாரணை விருதுநகர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகு பேராசிரியை நிர்மலாதேவியை போலீஸ் காவலில் விசாரிக்க 10 நாள் அனுமதி கோரி சிபிசிஐடி சார்பில் கடந்த 19-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்காக சாத்தூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி 20-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நிர்மலாதேவியிடம் 5 நாள் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீஸாருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

அதையடுத்து, விருதுநகரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் பேராசிரியை நிர்மலாதேவியிடம் சிபிசிஐடி எஸ்.பி. ராஜேஸ்வரி விசாரணை நடத்தி வருகிறார். பேராசிரியை நிர்மலாதேவி தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்துவதற்காக 3 டி.எஸ்.பி.க்கள் மேற்பார்வையில், 9 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவணங்கள் பறிமுதல்

அருப்புக்கோட்டை காவியன் நகரில் உள்ள பேராசிரியை நிர்மலாதேவியின் வீட்டில் சிபிசிஐடி போலீஸார் கடந்த 21-ம் தேதி சுமார் 6 மணி நேரம் தீவிர சோதனை நடத்தினர். அப்போது, டைரிகள், ஆவணங்கள், புகைப்படங்கள், கணினி உள்ளிட்டவற்றை எடுத்து வந்தனர். அப்போது பல லட்சம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும் பேராசிரியை நிர்மலாதேவி தன்னுடன் தொடர்பில் இருந்த பேராசிரியர்கள் உட்பட பல்வேறு நபர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சிபிசிஐடி போலீஸாரிடம் சிக்கியுள்ளன. அதைக் கொண்டு சிபிசிஐடி போலீஸார் கடந்த 2 நாட்களாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, 5 நாள் காவல் முடிந்து பேராசிரியை நிர்மலாதேவி நீதிமன்றத்தில் நாளை (ஏப்.25) மீண்டும் ஆஜர்படுத்தப்படுவார் என்றும், அவரை சென்னை உட்பட பல்வேறு ஊர்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளதால், மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி நீதிமன்றத்தில் சிபிசிஐடி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

6 மாணவிகளிடம் பேச்சு

இந்நிலையில், பேராசிரியை நிர்மலாதேவி மேலும் 6 மாணவிகளிடம் பாலியல்ரீதியாகப் பேசி இருப்பது சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

“அருப்புக்கோட்டையில் உள்ள சம்பந்தப்பட்ட கல்லூரியில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் விசாரணை நடத்தியபோது, சம்பந்தப்பட்ட 6 மாணவிகள் அவரிடம் புகார் அளிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது.

அவர்களிடம், ‘சிபிசிஐடி போலீஸாரிடம் புகார் அளிக்குமாறும், தனது விசாரணை அறிக்கையில் இப்புகார் குறித்து தானும் சேர்த்துக் கொள்கிறேன்’ என அதிகாரி சந்தானம் தெரிவித்துள்ளார். ஆனால், போலீஸாரிடம் புகார் அளிக்க மாணவிகள் தயங்கி வருகின்றனர். இவ்வாறு சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x