

கோவையில் குடும்பக் கட்டுப் பாட்டு அறுவைச் சிகிச்சையில் பெண் உயிரிழந்த விவகா ரத்தில், வலிப்பு நோய் இருந் ததை மறைத்ததால் பெண் உயிரிழந்ததாகவும், சிகிச் சையில் தவறில்லை என்றும் விசாரணைக்குப் பின்னர் சுகாதாரத் துறை கோவை மாவட்ட இணை இயக்குநர் எம்.பாத்திமா தாவூத் தெரிவித்துள்ளார்.
கோவை சுக்ரவார்பேட்டை தியாகி குமரன் வீதியைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி வினோத்குமார் மனைவி கலைவாணி (32), மாநகர நகர் நல மருத்துவமனையில் மாவட்ட சுகாதாரத் துறை சார்பில் கடந்த ஜூலை 25-ம் தேதி நடத்தப்பட்ட குடும்பக் கட்டுப்பாட்டு சிறப்பு முகாமில் சிகிச்சைக்காக சென்று, அறுவை சிகிச்சையின்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்குச் சென்றார்.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஒரு வாரமாக கோமாவில் இருந்த கலைவாணி, வெள்ளிக் கிழமை இரவு உயிரிழந்தார்.
இந்த அதிர்ச்சி செய்தி >“தி இந்து - உங்கள் குரல்” மூலம் தெரியவந்து, அது தொடர்பாக கடந்த இரு தினங்கள் விரிவான செய்தி வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக இந்த சம்பவம் குறித்து அதிகாரிகள் குழு திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
கலைவாணி உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் ஃபாத்திமா தாவூத் துக்கு மாநில சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள் ளப்பட்ட மருத்துவமனைக்கு இணை இயக்குநர் தலைமையி லான மருத்துவக் குழுவினர் திங்கள்கிழமை சென்று விசாரணை நடத்தினர்.
மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் (மருத்துவம்), சிகிச்சை அளித்த மருத்துவர்கள், பெண்ணின் உறவினர்கள் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணை குறித்து ஃபாத்திமா தாவூத் `தி இந்து' தமிழ் நாளிதழிடம் கூறுகையில், கலைவாணி இறப்பு குறித்து விசாரணை முடித்து சுகாதாரத் துறை தலைமை அலுவலகத்தில் அறிக்கை தாக்கல் செய்ய உள்ளோம். பெண்ணுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட மருத்து வமனை மற்றும் சிகிச்சை அளித்த மருத்துவர்களிடம் விசார ணை நடத்தியதில் எவ்வித தவறும் இருப்பதாகத் தெரியவில்லை. அறுவை சிகிச்சைக்கு முன்பாக வலிப்பு நோய் இருந்ததை தெரிவிக்காமல் விட்டதே இறப்புக்கு காரணம்.
பெண்ணின் உறவினர்களிடம் திங்கள்கிழமை நடத்தப்பட்ட விசாரணையில், கலைவாணிக்கு சிறு வயதில் வலிப்பு நோய் வந்ததை கணவர் வீட்டாரிடம் தெரிவிக்காமல் திருமணம் செய்து வைத்துள்ளனர். இதனால்தான், சிகிச்சையின்போது அவர் தெரிவிக்காமல் விட்டிருக்கலாம் என நினைக்கிறோம். இந்த விசாரணை அறிக்கை திங்கள்கிழமை இரவுக்குள் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார்.
நீதி கேட்டு மனு
இந்நிலையில், கலைவாணி உயிரிழப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி இரு குழந்தைகளுடன் கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த கணவர் வினோத்குமார் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்கை சந்தித்து திங்கள்கிழமை மனு அளித்தார்.
அப்போது, அவர் கூறுகையில், இரண்டுமே பெண் குழந்தைகள். எனது மூத்த மகளுக்கு 6 வயதாகிறது. அம்மா எங்கே என அவ்வப்போது கேட்கிறாள். ஊருக்கு போய் இருப்பதாக சொல்லி சமாளித்து வருகிறேன். அவளும் அதை நம்பிக்கொண்டு இருக்கிறாள். இளைய மகளுக்கு ஒரு வயது ஆகிறது.
அம்மா இறந்துவிட்டதால் புட்டிபால் கொடுக்கிறோம். அந்த பாலை குடிக்க மறுக்கிறாள். குடும்ப கட்டுப்பாடு செய்யாமல் இருந்திருந்தால்கூட எங்களுடன் அவள் இருந்திருப்பாள்.
வலிப்பு நோய் இருந்தால் அறுவை சிகிச்சையின்போது பாதிப்பு ஏற்படும் என எங்களுக்கு தெரியாது.
வலிப்பு நோய் இருந்ததா என சிகிச்சைக்கு முன்னதாக மருத்துவர் கேட்டதாகவே தெரியவில்லை. நான் சாதாரண கட்டிடத் தொழிலாளி. தாய் இல்லாமல் இந்த குழந்தைகளை எப்படி வளர்க்கப் போகிறேன் எனத் தெரியவில்லை என்றார்.