தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணியில்  27,000 பணியாளர்கள்: பொது சுகாதாரத் துறை தகவல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் கொசு ஒழிப்பு பணியில் 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழைக் காலம் தொடங்கியுள்ள நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும், தென் மேற்கு பருவ மழையின் தாக்கம் இருக்கும். இதனால், வெப்பச் சலனம் காரணமாக உள் மாவட்டங்களில் மழைப் பொழிவு இருக்கக் கூடும். எனவே, மாநிலம் முழுவதும் கொசு ஒழிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த அறிவுறுத்தல்களும் மாவட்ட நிர்வாகங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘தமிழகத்தில் டெங்கு மற்றும் மழைக்கால தொற்று நோய்களான வயிற்றுப்போக்கு, டைஃபாய்டு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒருங்கிணைந்து கொசு ஒழிப்பு, டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், காய்ச்சல் கண்டறிதல், மருத்துவ முகாம்கள் நடத்துதல் என பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன.

குறிப்பாக, டெங்கு, சிக்குன் குனியா உள்பட கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்தும் பணிகளில் 27 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்குத் தேவையான உயிர்காக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், பரிசோதனை கருவிகள், ரத்த கூறுகள் மற்றும் ரத்தம் ஆகியவை போதிய அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின் வசதிகள் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in