ஸ்ரீவில்லி. கொலை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு

ஸ்ரீவில்லி. கொலை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமீன் மறுப்பு
Updated on
1 min read

மதுரை: ஸ்ரீவில்லிப்புத்தூர் கொலை வழக்கில் கைதான பெண் காவல் ஆய்வாளருக்கு இடைக்கால ஜாமீன் வழங்க ஐகோர்ட் கிளை மறுத்துவிட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் மே 22-ல் நடந்த மோதலில் ராமர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் அதே பகுதியைச் சேர்ந்த ராமசாமி, அவரது மகன் ராஜேந்திரன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ராமசாமியின் மற்றொரு மகன் ராம்குமாரை பெங்களூருவில் போலீஸார் கைது செய்தனர்.

அப்போது ராம்குமாருடன் மண்டபம் மறுவாழ்வு முகாம் மற்றும் ராமநாதபுரம் சைபர் க்ரைம் காவல் ஆய்வாளர் சத்தியஷீலாவும் (42) உடன் இருந்தார். அவரையும் போலீஸார் கைது செய்தனர். முன்னதாக காவல் ஆய்வாளர் சத்தியஷீலா ஐகோர்ட் கிளையில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'ராமர் தாக்கப்பட்ட வழக்கில் போலீஸார் என் மீது தேவையில்லாமல் குற்றச்சாட்டு கூறியுள்ளனர். எனவே, எனக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்' எனக் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சத்தியஷீலா தரப்பில், ''கொலை வழக்கில் மனுதாரர் தற்போது கைது செய்யப்பட்டிருப்பதால், அவரது முன்ஜாமீ்ன் மனுவை ஜாமீன் மனுவாக கருதி விசாரிக்க வேண்டும்'' என கோரிக்கை வைக்கப்பட்டது.

மேலும், ''மனுதாரருக்கு அவரது பிள்ளைகளை கல்லூரியில் சேர்ப்பது தொடர்பான பணிகள் இருப்பதால், இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும்'' எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதையேற்க மறுத்து விசாரணையை ஜூன் 3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in