Published : 10 Aug 2014 10:13 AM
Last Updated : 10 Aug 2014 10:13 AM

புகாருக்கு ஆளான அமைச்சர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கேள்வி

அதிமுக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீதான வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் மீது ஜெயலலிதா எடுத்த நடவடிக்கை என்ன என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட கேள்வி-பதில் அறிக்கை யில் கூறியிருப்பதாவது: அதிமுக வில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக பேரவையில் ஜெயலலிதா கூறியி ருக்கிறார். பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த நாகமுத்து என்பவர் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டார். தன் மரணத்துக்கு அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜாதான் காரணம் எழுதி வைத்து விட்டு இறந்தாரே, அந்த வழக்கு என்ன ஆயிற்று?

ஈரோடு மாவட்டம் புதூர் அருக்கம் பாளையத்தைச் சேர்ந்த முத்துசாமி, தன் நிலத்தை அமைச்சர் ராமலிங்கம் ஆதரவுடன் அவரது ஆட்கள் அபகரித்ததாக எஸ்பியிடம் புகார் கொடுத்தார். அமைச்சர் செந்தில் பாலாஜி மீது நில அபகரிப்புப் புகார் எழுந்து நீதிமன்றம் வரை வந்தது. கோகுல் என்பவர், கரூர் நீதிமன்றத்தில் கொடுத்த வாக்குமூலத்தில் தன்னை கடத்திச் சென்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி சித்ரவதை செய்து மிரட்டியதாக கூறினாரே, அதற்குப் பிறகு கோகுல் என்னவானார்? அந்த வழக்கு என்ன ஆயிற்று?

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக மதுரை உயர் நீதி மன்றக் கிளையில் வழக்கு வந்தது. மீன் வளத் துறை அமைச்சர் ஜெயபால், தன் மீதிருந்த வழக்கை வேட்பு மனுவின்போது, மறைத்து விட்டதாக குற்றச்சாட்டு வந்தது.

முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி, தன்னை இரண்டாம் திருமணம் செய்து கொண்டு தன்னிடமிருந்து 60 பவுன் நகைகளை வாங்கிக் கொண்டு ஏமாற்றி விட்டார் என்று திருச்சியைச் சேர்ந்த ராணி என்பவர் காவல் துறையிடம் புகார் கொடுத்து, சரியாக விசாரிக்காததால் நீதிமன்றம் வரை சென்றாரே, என்ன ஆயிற்று அந்த வழக்கு?

சபாநாயகர் தனபால், கூட்டுறவு சங்க நிலத்தை விற்பனை செய்ய முயற்சிப்பதாக கூறப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்த ஒரு மாத காலத்திலேயே காவல் நிலையத் துக்கு அதிமுக எம்எல்ஏ ஒருவரும் அமைச்சரும் சென்று, ஆளுங் கட்சியினர் ஏழு பேரை அழைத்துச் சென்றது உண்டா, இல்லையா? இப்படி எழுதிக்கொண்டே போகலாம். இவர்களில் எத்தனை பேர் மீது ஜெயலலிதா நடவடிக்கை எடுத்தார்?

இவ்வாறு அறிக்கையில் கருணாநிதி கேட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x