ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரம்: நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்
சென்னை: தாம்பரத்தில் விரைவு ரயிலில் ரூ.4 கோடி கைப்பற்றப்பட்ட விவகாரத்தில், பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ உள்ளிட்ட 4 பேர் நாளை ஆஜராகுமாறு சிபிசிஐடி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலை முன்னிட்டு, பறக்கும் படையினர் கடந்த ஏப்ரல் மாதம் தீவிர சோதனை நடத்தி வந்தனர். அந்தவகையில், ஏப்ரல் 6-ம் தேதி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில், எழும்பூர் - திருநெல்வேலி நெல்லை விரைவு ரயிலில் சோதனை நடத்திய பறக்கும் படையினர், 3 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.4 கோடியை கைப்பற்றினர்.
திருநெல்வேலி தொகுதி பாஜகவேட்பாளரான எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் தேர்தல் செலவுக்காக இத்தொகை கொண்டு செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இதை நயினார் நாகேந்திரன் திட்டவட்டமாக மறுத்தார்.
இதற்கிடையே, இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவு போலீஸார் தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
முதல்கட்டமாக, ரயிலில் பணத்துடன் பிடிபட்ட சதீஷ், அவரது சகோதரர் நவீன், ஸ்ரீவைகுண்டம் ஓட்டுநர் பெருமாள், நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகன், அவரிடம் பணியாற்றும் ஜெய்சங்கர், ஆசைத்தம்பி ஆகியோருக்கு சம்மன் அனுப்பி, சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தினர்.
பணம் கைமாறியதாக கூறப்படும் தமிழக பாஜக வர்த்தக பிரிவு தலைவர் கோவர்த்தனுக்கு சொந்தமான சென்னை பசுமைவழி சாலையில் உள்ள உணவகம், நீலாங்கரை பகுதியில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கோவையில் வசிக்கும் தமிழக பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி போலீஸார் கடந்த வாரம் விசாரணை நடத்தினர்.
இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், அடுத்த கட்டமாக நயினார் நாகேந்திரன், அவரது உதவியாளர் மணிகண்டன், தமிழக பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகன், வர்த்தக பிரிவு தலைவர் கோவர்த்தன் ஆகிய 4 பேரும் சென்னை எழும்பூரில் உள்ளசிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் மே 31-ம் தேதி (நாளை) ஆஜராகுமாறு சிபிசிஐடி சார்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவல்களின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சிபிசிஐடி போலீஸார் தெரிவித்துள்ளனர்.
