பாதுகாப்பு குறைபாடு காரணமாக 409 பள்ளி வாகனங்களுக்கு தகுதி சான்று வழங்க மறுப்பு

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் பள்ளி வாகனங்களை சோதனை செய்வது வழக்கம். இதில் போக்குவரத்து, காவல், கல்வி உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று, சாலையில் செல்லும் வகையில் வாகனம் தகுதியானதாக உள்ளதா என்பது தொடர்பாக ஆய்வு செய்வர்.

அதன்படி, நடப்பாண்டுக்கான சோதனை பணிகளும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடைபெற்று வந்தது. சென்னையில் 4,624 பள்ளிவாகனங்கள் உள்ளன. இவற்றில்3,243 வாகனங்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இதில், குறைபாடுஉள்ள 409 வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதிச்சான்று வழங்கமறுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் வரும் 6-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. எனவே, பள்ளி வாகனங்களில் அவசரகால கதவு, ஜன்னல்கள், படிகள் உள்ளிட்ட 16 அம்சங்கள் குறித்து ஆய்வு நடத்தி வருகிறோம்.

அவசர கால கதவுகள் செயல்படாதது உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள 400-க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தற்காலிகமாக தகுதிச்சான்று வழங்க மறுக்கப்பட்டுள்ளது. குறைபாடுகளை சரி செய்த பிறகே வாகனங்களை இயக்க அனுமதி வழங்கப்படும். மீதமுள்ள வாகனங்களை சோதனை செய்யும் பணிகளும் விரைந்து முடிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in