

வல்லநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மாணவர்கள் வேறொரு வகுப்பறையில் இருந்ததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
வல்லநாட்டில் உள்ள கருங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 91 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 4 ஆசிரியர்கள் உட்பட 7 பணியாளர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில், சில கட்டிடங்கள் பழுதாகி மேற்கூரை பெயர்ந்து அபாயகரமான நிலையில் உள்ளன.
இதுதொடர்பாக பெற்றோர், ஊர்மக்கள் மற்றும் ஆசிரியர்கள் சார்பில், கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளி டம் பலமுறை புகார் அளிக்கப் பட்டுள்ளது. ஆனால் நடவடிக்கை இல்லை.
மேற்கூரை இடிந்தது
இப்பள்ளி கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள பழமையான பழுதடைந்த கட்டிடம் ஒன்றின் நிலை படுமோசமாக இருந்தது. மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் அந்த கட்டிடத்தை பயன்படுத்தாமல் இருந்தனர்.
இந்நிலையில் வல்லநாடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக அந்த பழைய கட்டிடத்தின் மேற்கூரை புதன்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது. அப்பகுதியில் மாணவர்கள் விளையாடிக் கொண்டிருந்த போது கட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
மாணவர்கள் இடமாற்றம்
ஆசிரியர்கள் அளித்த தகவலின் பேரில், வட்டார வளர்ச்சி அலுவலர், உதவித் தொடக்க கல்வி அலுவலர் உள்ளிட்டோர் வியாழக்கிழமை அங்கு வந்து பார்வையிட்டனர். கட்டிடத்தின் நிலை குறித்து ஊராட்சித் தலைவி கொம்பம்மாள், வல்லநாடு கூட்டுறவு வங்கித் தலைவர் பரமசிவன் மற்றும் பெற்றோர், அதிகாரிகளிடம் எடுத்துக் கூறினர்.
பாதி இடிந்த நிலையில் கட்டிடம் அபாயகரமாக இருந்த தால், அந்த கட்டிடத்தை முழுமை யாக இடிக்க அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, கட்டிடம் முழுவதுமாக இடித்து அகற்றப்பட்டது.
தற்போது வகுப்புகள் நடைபெற்று வரும் இரண்டு கட்டிடங்களின் நிலையும் மிகவும் மோசமாகவே உள்ளது. எனவே, மாணவர்கள் அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றி, அருகில் உள்ள பாதுகாப்பான மற்றொரு கட்டிடத்துக்கு இடமாற்றினர்.
புதிய கட்டிடம்
பொதுமக்கள் கூறுகையில், இந்த பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஏற்கெனவே பலமுறை புகார் செய்துள்ளோம். அதிகாரிகள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஒரு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது.
கட்டிடங்களின் நிலையைப் பார்க்கும் போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பவே பயமாக இருக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில், பழைய கட்டிடங்களை இடித்து அகற்றிவிட்டு புதிய கட்டிடங்கள் கட்டித் தரவேண்டும்’ என்றனர்.
நிதி இல்லை
கருங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூறுகையில், ‘வல்லநாடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் வந்ததின் பேரில், கல்வித்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு நடத்த உத்தரவிட்டார். கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கருங்குளம் ஊராட்சி ஒன்றியத் தில் தற்போது போதிய நிதி இல்லை. பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்க அரசிடம் இருந்து நிதி கோரப்பட்டுள்ளது. நிதி கிடைத்ததும் கட்டிடங்கள் சீரமைக்கப்படும்’ என்றனர்.