தென்காசி மாவட்டத்தில் அடிக்கடி மின் தடை: ஊழியர் பற்றாக்குறையால் திணறல்

தென்காசியில் மின் பாதையில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்கள்
தென்காசியில் மின் பாதையில் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி சீரமைப்புப் பணிகளில் ஈடுபடும் களப்பணியாளர்கள்
Updated on
2 min read

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால், அடிக்கடி மின் தடை ஏற்பட்டு வருகிறது. ஆட்கள் பற்றாக்குறையால் மின்வாரிய பணியாளர்கள் ஓய்வின்றி சீரமைப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய தென்காசி மாவட்டத்தில் மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவக் காற்று வீசும். மாவட்டத்தின் ஒரு சில பகுதிகள் தவிர பெரும்பாலான பகுதிகிளில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த ஆண்டு மே மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவக்காற்று வீசத் தொடங்கியது. ஆனால் ஒரு வாரத்தில் காற்றின் வேகம் குறைந்து கோடை மழை பெய்யத் தொடங்கியது. 2 வாரமாக கோடை மழை நீடித்த நிலையில் கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதனால் மின் பாதைகளில் மரக்கிளைகள் உரசியும், மரங்கள் மற்றும் மரக்கிளைகள் முறிந்து மின் பாதைகளில் விழுந்தும் அடிக்கடி மின் தடையை ஏற்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகின்றனர். அடிக்கடி ஏற்படும் மின் தடையால் சிறு, குறு தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. மின்வாரிய ஊழியர்கள் இரவு பகலாக சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு, மின் விநியோகம் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மின்வாரிய தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அகற்றுவது, டிரான்ஸ்பார்மர்களை ஆய்வு செய்வது உள்ளிட்ட பணிகளுக்காக மாதத்தில் ஒரு நாள் காலை முதல் மாலை வரை மின் விநியோகத்தை நிறுத்தி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த காலங்களில் பொதுத் தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்க அரசு அறிவுறுத்தும். ஆனால் இந்த ஆண்டில் தேர்வு காலம் முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவிட்டது. மேலும், கோடை காலத்திலும் பொதுமக்கள் நலன் கருதி தடையில்லா மின்சாரம் வழங்க அறிவுறுத்தியது.

இதனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து மே மாதம் வரை 4 மாதங்களாக தொடர்ந்து மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. தேவைப்படும் பகுதியில் ஒரு மணி நேரம் மட்டும் மின் விநியோகத்தை நிறுத்தி அவசர கால பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மின் பாதைக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை அப்புறப்படுத்த முடியவில்லை. தற்போது காற்று காலத்தில் மரங்கள், கிளைகள் மின் பாதையில் முறிந்து விழுந்து அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது. இதனால் ஓய்வின்றி தொடர்ந்து பணியாற்ற வேண்டிய நிலை உள்ளது.

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டத்துக்கு உட்பட்ட திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் மொத்த அனுமதிக்கப்பட்ட கள உதவியாளர்கள் எண்ணிக்கை 1147 பேர். பணியில் இருப்பவர்கள் எண்ணிக்கை 148 பேர். காலி பணியிடங்கள் 999. மொத்த அனுமதிக்கப்பட்ட கம்பியாளர் எண்ணிக்கை 727 பேர். ஆனால் பணியில் இருப்பவர்கள் 409 பேர். காலி பணியிடங்கள் 318. இது கடந்த ஆண்டு நிலவரம். இந்த ஆண்டு காலி பணியிடங்கள் மேலும் அதிகரித்துள்ளது.

மின்வாரியத்தில் கள உதவியாளர்கள், கம்பியாளர்கள் பணிதான் ஆணிவேர் போன்றது. புதிய மின் இணைப்பு வழங்குதல், மீட்டர் இடம் மாற்றம் செய்தல், பணம் செலுத்தாத மின் நுகர்வோர் மின் இணைப்பைத் துண்டித்தல், மின் பழுதுகளை சரி செய்தல், மின் பாதைகளுக்கு அருகில் செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுகின்றனர்.

மின்வாரியத்தில் கள உதவியாளர்கள், கம்பியாளர்கள் பற்றாக்குறை 90 சதவீதம் உள்ளது. இதனால் பொதுமக்களுக்கு கிடைக்க வேண்டிய தீர்வுகள் சில சமயங்களில் தாமதமாக கிடைக்கிறது. எனவே கள உதவியாளர்கள், கம்பியாளர்களை உடனே நியமித்து வாரியம் செம்மையாக செயல்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் கள உதவியாளர் கம்பியாளர் பணி இடங்களை நிரப்புவதால் வாரியத்துக்கு வருவாய் பெருக்கம் தான் ஏற்படுமே தவிர வருவாய் இழப்பு ஏற்படாது. ஏனெனில் மிகக் குறைந்த ஊதியத்தில் வாரியத்தில் பணிபுரியவர்கள் கள உதவியாளர் மற்றும் கம்பியாளர்கள். ஆனால் அவர்கள் தான் வாரியத்தின் வருவாய் பெருக்கத்துக்கும் வருவாய் இழப்பீடு ஏற்படுவதை தவிர்க்கும் மிக முக்கிய காரணகர்த்தாவாக உள்ளனர். எனவே காலி பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in