Published : 29 May 2024 06:10 AM
Last Updated : 29 May 2024 06:10 AM
சென்னை: வைகோவுக்கு இன்று அறுவை சிகிச்சை நடைபெறவுள்ளது. அவர்வீடு திரும்பிய பிறகு கட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்க வருகை தரலாம் என கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதிமுக நிர்வாகியின் மகள் திருமணத்துக்குச் செல்வதற்காக கடந்த 25-ம் தேதி நெல்லையில் தனது சகோதரர் வீட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தங்கியிருந்தார். அங்கு கால் இடறி விழுந்ததில் வைகோவுக்கு வலது தோளில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அவர் தூத்துக்குடி சென்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார்.
பின்னர், சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குபரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இன்று (மே 29) அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் குழு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், அவரது உடல் நிலை குறித்து மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தவறி விழுந்த தகவலறிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், என்னை அழைத்து அவரது உடல்நிலை குறித்து விசாரித்தார். அறுவை சிகிச்சை முடிந்து மூன்று நாள் கழித்து வீடு திரும்பிய பிறகு வந்து சந்திப்பதாக முதல்வர் தெரிவித்தார்.
சிறிய அறுவை சிகிச்சைதான்: அரசியலில் வைகோ இழந்தது அதிகம். ஆனால் தனது நேர்மை, தியாகத்தால் தமிழர்களின் மனங்களில் நீங்கா இடத்தைப் பெற்றிருக்கிறார். அதனால் தான், அரசியல் எல்லைகளை கடந்து அவர் நலம்பெற வேண்டும் என அனைவரும் தங்கள் விருப்பத்தை என்னிடம் தொலைபேசி வாயிலாக பகிர்ந்து கொண்டனர். நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி. அவருக்கு செய்யவிருப்பது சிறிய அறுவை சிகிச்சை தான். யாரும் பயப்பட வேண்டியது இல்லை.
இதனிடையே, அவரது உடல்நிலை குறித்து சில விஷமிகள் தவறான செய்திகளை பரப்பி ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். எலும்பு முறிவால் ஏற்படும் வலியை மட்டும் தாங்கிக் கொண்டிருக்கிறார். எப்போதும் போல வழக்கமான உணவை எடுத்துக் கொள்கிறார். அவருக்கு மிகவும் பிடித்தமான டென்னிஸ், இப்போது நடைபெறுகிற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டிகளை ஆர்வத்துடன் தொலைக்காட்சியில் பார்க்கிறார். தொலைக்காட்சி செய்திகளை பார்த்து அவ்வப்போது தகவல்களை பரிமாறிக் கொள்கிறார்.
எனவே, அவர் பற்றி வெளிவரும் எந்த செய்தியையும் புறந்தள்ளுங்கள். மருத்துவமனை நிர்வாகத்துக்கும், பிற நோயாளிகளுக்கும் எந்தவித இடையூறும் வரக் கூடாது என்பதால், யாரும்தலைவரை சந்திக்க வர வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். விரைவில் பூரண நலம் பெற்று வீடு திரும்பிய பிறகுகட்சி நிர்வாகிகள் அவரை சந்திக்கலாம். இவ்வாறு துரை வைகோ தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT