Published : 22 Apr 2018 09:56 AM
Last Updated : 22 Apr 2018 09:56 AM

381 ஆடுகளை பலியிட்டு விடிய விடிய விருந்து: ஆண்கள் மட்டும் பங்கேற்கும் நள்ளிரவு விழா

சிவகங்கை அருகே திருமலை கிராமத்திலுள்ள மடைக்கருப்பசாமி கோயிலில் நேற்று முன்தினம் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் நள்ளிரவு திருவிழா நடைபெற்றது. இதில் 381 ஆடுகளை பலி கொடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் விடிய, விடிய சமைத்த இறைச்சி உணவைக் கொண்டு விருந்து பரிமாறப்பட்டது.

திருமலை கிராமத்தில் மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் அருகே மடைக்கருப்பசாமி கோயில் உள்ளது. சுமார் 300 ஆண்டுகள் பழமையான இக்கோயிலில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கின்றனர். சித்திரை முதல் தேதி காப்பு கட்டுதலுடன் ஆண்கள் விரதம் தொடங்கினர்.

விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தின் அருகே உள்ள கண்மாயில் உள்ள மடைகள் அடைக்கப்பட்டன. எட்டாம் நாளான நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு திருமலையிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் ஊர்வலமாக மடைக் கருப்பசாமி கோயிலுக்கு புறப்பட்டனர். பின்னர் மலைக் கொழுந்தீஸ்வரர் கோயிலில் தீர்த்தம் எடுத்து மண் பானையில் பொங்கலிட்டு வழிபட்டனர்.

இதனைத் தொடர்ந்து 381 ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். பொங்கல், சமைத்த ஆட்டிறைச்சி, பச்சரிசி சாதம், ஆடுகளின் தலைகளை சுவாமி முன் வைத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். அதிகாலை 4 மணியளவில் கவுலி (பல்லி) சத்தம் கேட்டதும் அனைவருக்கும் அசைவ உணவு வழங்கப்பட்டது. இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டதால் விடிய, விடிய காலை 7 மணிவரை விருந்து நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x