

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை மீண்டும் கனமழை கொட்டியது. பேச்சிப்பாறையில் 52 மி.மீ. மழை பதிவானது.
குமரி மாவட்டம் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகள் நிரம்பி வருகின்றன. ஆறுகள், கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து மாவட்டம் முழுவதும் உள்ள பாசனக் குளங்கள் நிரம்பி வருகிறது. கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில், திங்கள்கிழமை இரவிலிருந்து செவ்வாய்க்கிழமை காலை வரை மாவட்டம் முழுவதும் மீண்டும் கனமழை கொட்டித் தீர்த்தது.
நாகர்கோவில், கன்னியாகுமரி, தக்கலை, இரணியல், கொட்டாரம், மயிலாடி, குழித்துறை, திற்பரப்பு, குலசேகரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளிலும் இன்று காலை பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்ததை அடுத்து அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறையில் அதிகபட்சமாக 52.8 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 45.20 அடியாக இருந்தது. அணைக்கு 568 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 58.80 அடியாக உள்ளது. அணைக்கு 434 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 15.15 அடியாகவும், சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 15.25 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 16.20 அடியாகவும் உள்ளது. மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 30.43 அடியாகவும், உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணையின் நீர்மட்டம் 13 அடியாக உள்ளது.
திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் 8 நாட்களுக்கு பிறகு கடந்த இரண்டு நாட்களாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளித்திருந்த நிலையில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அருவியில் உற்சாகமாக குளித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் திங்கள் இரவு முதல் மீண்டும் மழைபெய்ய ஆரம்பித்திருப்பதால் மீன்பிடி பணி, ரப்பர் பால்வெட்டும் தொழில், தென்னை சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டன.