நெல்லை: உரிய நிறுத்தத்தில் நிற்காத அரசுப் பேருந்து: நடத்துநர், மேலாளருக்கு ரூ.18,000 அபராதம்

நெல்லை: உரிய நிறுத்தத்தில் நிற்காத அரசுப் பேருந்து: நடத்துநர், மேலாளருக்கு ரூ.18,000 அபராதம்
Updated on
1 min read

திருநெல்வேலி: உரிய பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் 1 கி.மீ. தொலைவு தள்ளி அரசுப் பேருந்து நிறுத்தப்பட்டது சேவை குறைபாடு என்று சுட்டிக்காட்டி, அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளர் மற்றும் நடத்துநருக்கு ரூ.18 ஆயிரம் அபராதம் விதித்து திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகா மூன்றடைப்பு அன்பு நகரைச் சேர்ந்தவர்கள் முப்பிடாதி, சீதா, கோமதி, சக்தி பிரியா. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 12.02.2023-ம் தேதி இரவு 10.45 மணிக்கு அரசுப் பேருந்தில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் மூன்றடைப்பு செல்ல நடத்துநரிடம் டிக்கெட் கேட்டுள்ளனர். ஆனால் அவரோ, மூன்றடைப்பில் பேருந்து நிற்காது என்றும் வள்ளியூரில் தான் பேருந்து நிற்கும் என்று வாக்குவாதம் செய்துள்ளார். முடிவில் வள்ளியூர் பயண கட்டணமாக 3 முழு டிக்கெட்டும், ஓர் அரை டிக்கெட்டும் ரூ.122-ஐ பெற்றுக்கொண்டு வழங்கியுள்ளார்.

பேருந்தானது மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்தில் நின்று செல்வதற்கு வழித்தட அனுமதி இருந்தும் மூன்றடைப்பில் பேருந்து நிற்காது என நடத்துநர் வாக்குவாதம் செய்துள்ளார். இதனால் நாகர்கோவில் அரசுப் போக்குவரத்து கழக கிளை மேலாளரை முப்பிடாதி தொடர்பு கொண்டு பேருந்து மூன்றடைப்பு நிறுத்தத்தில் நிறுத்த மறுத்த தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து கிளை மேலாளர் நடத்துநரிடம் மூன்றடைப்பில் பேருந்து நின்று செல்வதற்கு அனுமதி இருப்பதால் மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விடுமாறு உத்தரவிட்டுள்ளார். ஆனாலும் மூன்றடைப்பு பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் 1 கி.மீ. தூரம் கடந்து சென்ற பின்னர் நடத்துநர் விசிலடித்து பேருந்தை நிறுத்தி உள்ளார். இதனால் இரவு நேரத்தில் முப்பிடாதி குடும்பத்தினர் 1 கி.மீ. தூரம் நடந்து வந்துள்ளனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான முப்பிடாதி, வழக்கறிஞர் பிரம்மா மூலம் திருநெல்வேலி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் கிளாடஸ்டோன் பிளஸ்ட் தாகூர் மற்றும் உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர், "பேருந்து நிறுத்தத்தில் இறக்கி விடாமல் 1 கி.மீ. தொலைவுக்கு பேருந்து சென்ற பின்னர் பயணிகளை இறக்கிவிட்டது மிகப்பெரிய சேவை குறைபாடு" எனத் தெரிவித்தனர்.

மேலும், இதனால் நுகர்வோருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.15 ஆயிரம், வழக்கு செலவுக்கு ரூ.3 ஆயிரம் என்று மொத்தம் ரூ.18 ஆயிரத்தை நாகர்கோவில் அரசுப் போக்குவகத்து கழக கிளை மேலாளர் மற்றும் நடத்துநர் முப்பிடாதிக்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in