Published : 09 Aug 2014 08:49 AM
Last Updated : 09 Aug 2014 08:49 AM

புதிய சிந்தனைகளை ஊக்குவித்தால் அறிவுசார் சமுதாயம் மலரும்: இந்து என்.ராம் பேச்சு

நல்ல, புதுமையான கருத்துக்களையும் சிந்தனைகளையும் ஊக்குவித்தால் மட்டுமே அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க முடியும். இந்தியாவில் பேச்சு, கருத்து சுதந்திரம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும் என்று ‘இந்து’ என்.ராம் கூறினார்.

உலகம் முழுவதும் உள்ள ஒய்.எம்.சி.ஏ. அமைப்புகளுக்கு ஆதரவாக இருக்கும் சர்வதேச அமைப்பு ‘ஒய்’ஸ் மென் இன்டர் நேஷனல்’. இந்த அமைப்பின் 71-வது ஆண்டு மாநாடு நந்தம் பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடந்துவருகிறது. மாநாட்டின் 2-வது நாளான வெள்ளிக்கிழமை சிறப்பு விருந்தினராக ‘இந்து’ குழுமத் தலைவர் என்.ராம் கலந்து கொண்டார். அவர் பேசியதாவது:

தலைமைப் பொறுப்பில் இருந்து வழிநடத்திச் செல்பவர்களுக்கு நல்ல கருத்துக்கள், சிந்தனைகள் அவசியம். அவையும்கூட ஆக்கப்பூர்வமான கருத்துக்களாக இருக்க வேண்டும். புதிது புதிதாக நல்ல கருத்துக்களைப் பின்பற்றி வாழ்பவர்கள்தான் அறிவுசார் பிரிவினராக உள்ளனர்.

கணிதமேதை ராமானுஜன், எழுத்தாளர் ஆர்.கே.நாராயண் உள்ளிட்டோர் வாழ்வில் இப்படி தான் இருந்துள்ளனர். ராமானுஜன் வறுமையில் வாழ்ந்தவர். ஆனால், அவரது கருத்துக்கள், சிந்தனைகள் சிறப்பாக, புதுமையாக இருந்தன. இதைப் பார்த்த இங்கிலாந்து நாட்டின் பேராசிரியர் ஹார்டி, ராமானுஜனை தொடர்ந்து ஊக்கப் படுத்தினார். இதேபோல, ஆர்.கே.நாராயணின் சிந்தனையைப் பார்த்து கிரஹாம் கிரீன் என்ற எழுத்தாளர் தொடர்ந்து அவரை ஊக்குவித்தார். நல்ல கருத்துக் களுக்கும் சிந்தனைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். எனவே, நல்ல சிந்தனைகளை ஊக்கப்படுத்துங்கள். இதன் மூலமாக மட்டுமே அறிவுசார் சமுதாயத்தை உருவாக்க முடியும். கிராமங்களில் இருக்கும் பலரிடம் அபூர்வமான திறமைகள் உள்ளன. அதை அடையாளம்கண்டு ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியா ஜனநாயக நாடு என்கிறார்கள். ஆனால், சில விஷயங்களில் ஜனநாயகம் முடக்கப்படுகிறது. குறிப்பாக பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம் மறுக்கப்படுகிறது. எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின் புத்தகத்துக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மாறவேண்டும். பேச்சு, கருத்து சுதந்திரம் முழுமையாக அளிக்கப்பட வேண்டும்.

சமத்துவத்தைக் காப்பாற்றுவதாகக் கூறி, சில நாடுகள் சமத் துவத்தை நாசப்படுத்துகின்றன. அமெரிக்கா இந்த ரகம். ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு மொத்த சமுதாயத்தை வெறுக்கக் கூடாது. தற்போது பாலஸ்தீனம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. பாலஸ்தீனத்தில் நடத்தப் படும் தாக்குதலில் நூற்றுக் கணக்கான பெண்கள், குழந்தைகள் இறந்துள்ளனர். ஜனநாயக நாடான இந்தியாவும் பாலஸ்தீனம் விவகாரத்தில் கண்டனம் தெரிவிக்க வில்லை. இவ்வாறு ‘இந்து’ என்.ராம் பேசினார்.

மாநாட்டில் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் மார்க் கண்டேய கட்ஜு உட்பட பல் வேறு நாடுகளை சேர்ந்த 350க்கும் மேற்பட்ட நிபுணர்கள், பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். மாநாடு ஞாயிற்றுக்கிழமை வரை நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x