

பொது இடங்களில் வேட்டி அணிந்து வருவோரை தடுப்பவர் களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட மசோதாவை பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார்.
சென்னையில் உள்ள கிரிக்கெட் சங்க கிளப்பில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வேட்டி அணிந்து சென்ற நீதிபதி மற்றும் வழக்கறிஞர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம், சமீபத்தில் தமிழகம் முழுக்க கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சட்டப் பேரவையிலும் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். அப்போது பதிலளித்த முதல்வர் ஜெயலலிதா, ‘பொது இடங்களில் வேட்டிக்கு தடை விதிக்கும் கிளப்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் இதுதொடர்பாக நடப்பு கூட்டத் தொடரிலேயே சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் எனவும் அறிவித்தார்.
அதன்படி, சட்டப்பேரவையில் புதன்கிழமை கேள்வி நேரம் முடிந்ததும் 2014-ம் ஆண்டு தமிழ்நாடு பொது இடங்களுக்குள் நுழைவதற்கான (ஆடை மீதான தடையை நீக்குதல்) சட்ட மசோதாவை முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
சில சங்கங்கள் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் அல்லது மேலாண்மையின் கீழ் உள்ள பொது இடங்களுக்குள் தமிழர் பண் பாட்டை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி அல்லது எந்தவொரு இந்திய பாரம்பரிய உடையை அணிந்து வருபவர்களை, அவர்கள் மேற்கத்திய பாணியிலான உடையை அணிந்திருக்கவில்லை என்ற காரணத்துக்காக அனுமதிக்க மறுப்பதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தப் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்கும் வகையில், நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே இதற்குத் தேவையான சட்டமுன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்துவதற்கு, மேற்குறிப்பிட்ட காரணங் களுக்காக புதிய சட்டம் இயற்ற அரசு முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் நமது தொன்மையான, சிறப்புமிக்க பன்முகக் கூட்டுப் பண்பாட்டின் மதிப்பை உணர்ந்து அதைப் பாதுகாப்பது அடிப்படைக் கடமையாகும். எனவே, பொது இடங்களுக்கு வரும் நபர்களை, அவர்கள் அணிந்திருக்கும் உடை மேற்கத்திய கலாச்சாரத்தின் அடிப்படையில் இல்லை என்ற காரணத்துக்காக அனுமதி மறுப்பதும், அதற்காக விதிக்கப் பட்டிருக்கும் தடையும் கடந்த கால ஆங்கிலப் பேரரசின் ஆதிக்கச் செயல் இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதையே குறிக்கிறது.
தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் உடையான வேட்டி அல்லது இந்திய பாரம்பரிய உடை அணிந்து வருவோரை மனமகிழ் மன்றங்கள், உணவகங்கள், திரை யரங்குகள், பெரும் வணிக வளாகங்கள், அரங்குகள், அவைக் கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகளின் உள்ளே நுழைய தடை விதிப்பதை நீக்குவதற்கு இச்சட்டம் வகை செய்யும்.
மனமகிழ் மன்றம், தனி நபர்களின் கழகம், பொறுப்புக் கட்டளை நிறுமம் அல்லது சங்கம் எதுவும், இந்தச் சட்டத்தின் வகை முறைகளை மீறினால் அவற்றுக்கு அரசு வழங்கியுள்ள உரிமம் அல்லது அனுமதி ரத்து செய்யப்படுதல் வேண்டும். இந்த சட்டப்பிரிவு 3-ல் உள்ள விதிமுறைகளை மீறுவோர் யாராக இருந்தாலும் ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து தண்டிக்கப்படுதல் வேண்டும்.
இவ்வாறு அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.