Published : 28 May 2024 05:50 AM
Last Updated : 28 May 2024 05:50 AM
திருக்கழுகுன்றம்: திருக்கழுகுன்றத்தை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் இறுதிபல்லவர் காலத்தை சேர்ந்ததாக கருதப்படும் கொற்றவைசிற்பத்தை, வரலாற்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம், ஈசூரை அடுத்த சாத்தமங்கலம் கிராமத்தில் உள்ள வயல் வெளியில் கல் பலகை சிற்பம் ஒன்று உள்ளதாக ஹரிகிருஷ்ணன் என்பவர் கொடுத்த தகவலின் பேரில்,வரலாற்று ஆய்வாளர்கள் சங்கத்தை சேர்ந்த தொல்லியல் மற்றும் கல்வெட்டு ஆய்வாளர்கள், வரலாற்று ஆசிரியர் வடிவேல் தலைமையில் இப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் இறுதி பல்லவர் காலத்தைச் சேர்ந்த கொற்றவை சிற்பம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். வயல்வெளியில் உள்ள மேடான இடத்தில், பாதி புதையுண்ட நிலையில் இருந்த சிலையை சுத்தம் செய்து ஆய்வு செய்ததில், பலகைக் கல் சிற்பம் சுமார் 5 அடி உயரமும், 2.5 அடிஅகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. மேலும், 4 கரங்களுடன் காட்சியளிக்கும் கொற்றவை, வலது கரத்தில் மொட்டு மலரும்,இடது கரத்திலும் சங்கும், மற்றொரு வலது கரம் அபயஹஸ்த நிலையிலும், இடது கை கடிஹஸ்த நிலையிலும் உள்ளது.
தலை கரண்ட மகுடம் சூட்டி, சிற்றிடையில் ஆடையணிந்து, எருமை தலை மீது நின்ற கோலத்தில் காட்சியளிக்கும் இந்த கல் பலகை சிற்பம், இறுதி பல்லவர் காலமான கிபி 9 அல்லது 10-ம்நூற்றாண்டைச் சேர்ந்தாக இருக்கலாம் என தெரிகிறது. மேலும்,மிகவும் பழமையான இந்த கற்சிற்பம் தமிழ்நாட்டில் கண்டெடுக்கப்பட்ட கொற்றவை பெண்தெய்வ சிற்பங்களில் அரிதான ஒன்று என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
கிராம மக்கள் எதிர்ப்பு: இதுகுறித்து, வரலாற்று ஆய்வாளர்கள் சங்க தலைவர் மணியன் கலியமூர்த்தி கூறியதாவது: சாத்தமங்கலம் கிராமத்தில் கண்டறியப்பட்டுள்ள கொற்றவை சிற்பத்தை ஆய்வு செய்ய, முதலில் கிராம மக்கள் பல்வேறுகாரணங்களை கூறி எதிர்ப்புதெரிவித்தனர். அதையெல்லாம் மீறிதான் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதன்மூலம், இறுதி பல்லவர் காலத்தை சேர்ந்த கொற்றவை சிற்பத்தை கண்டறிந் துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT