Published : 28 May 2024 06:15 AM
Last Updated : 28 May 2024 06:15 AM
சென்னை: போக்குவரத்து ஆணையர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம் முழுவதும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் மண்டல அலுவலர்களால் திடீர் வாகன தணிக்கை நேற்று மேற்கொள்ளப்பட்டது. இதில் 5,463 வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அவற்றில் 1,054 வாகனங்களில் பல்வேறு விதிமீறல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
அதன்படி அதிக பாரம் ஏற்றி வந்த 179 வாகனங்கள், அதிக பயணிகளை ஏற்றி வந்த 150 வாகனங்கள், பிரேக் விளக்கு செயல்படாமல் இருந்த 125 வாகனங்கள், உரிமம் மீறி செயல்பட்ட 37 வாகனங்கள், வரி செலுத்தாமல் இருந்த 58 வாகனங்கள், தகுதி சான்று இல்லாத 76 வாகனங்கள், காப்பீட்டு சான்று இல்லாத 129 வாகனங்கள், ஓட்டுநர் உரிமம் இல்லாத 123 வாகனங்கள், வாகன புகை பரிசோதனை இல்லாத 50 வாகனங்கள், இன்ஜின் மாற்றங்கள் செய்யப்பட்ட 4 வாகனங்கள் உட்பட 1,054 வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த சிறப்பு வாகன தணிக்கை மூலம் ரூ.1.கோடியே 9 லட்சத்து 92,629 அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கோடை விடுமுறையில் மாநிலம் முழுவதும் உள்ள 34,835 பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் ஆய்வு குழுவினரால் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது.
அந்தவகையில் ஆவடியில் ஒரு பள்ளி பேருந்தை ஆய்வு செய்தபோது அதன் படிக்கட்டு உடைந்து விழுந்தது கண்டுபிடிக்கப் பட்டது. இதுபோன்ற குறைபாடுகள் உள்ள பள்ளி பேருந்துகள் மீண்டும் பழுது நீக்கம் செய்யப்பட்ட பின்னரே தகுதிச் சான்று ஆய்வுக்கு மீண்டும் உட்படுத்தப்படும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT