உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனைக்கு எதிரான உத்தரவு ரத்து

உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த இளைஞர் உயிரிழப்பு: தனியார் மருத்துவமனைக்கு எதிரான உத்தரவு ரத்து
Updated on
1 min read

சென்னை: உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஏப்.23 ஆம் தேதியன்று உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதற்கு அடுத்தநாள் அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து அந்த மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதாரப் பணிகள் இணை இயக்குநர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக நிறுத்தி வைத்து கடந்த மே 4ம் தேதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, “அறுவை சிகிச்சை செய்து கொண்ட இளைஞரின் முன்அனுமதி பெற்ற பிறகே அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. 23 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் அந்த மருத்துவமனையிடம், இந்தச் சம்பவம் குறித்து விளக்கம் கேட்காமல் அதன் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். எனவே, அந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே அந்த மருத்துவமனை தொடர்ந்து செயல்படலாம்.

மேலும், தற்போது மருத்துவ வசதி என்பது கார்ப்பரேட்மயமாகி விட்ட நிலையில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் அவசியமாகிறது. எனவே ஏழை, எளிய மக்களுக்கு பலன் அளிக்கும் வகையில் இதுபோன்ற மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும்” என்று நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in